தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டு
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற ராமதாஸ் பேசியதாவது:
நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், நமது கோரிக்கைகளை என்எல்சி நிறுவனம் கேட்கவில்லை. இது தொடா்பான போராட்டம் நீதி கிடைக்கும் வரை தொடரும்.
தமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக 46 ஆண்டுகளாக போராடி வருகிறேன். வன்னியா்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடா்பாக அரசு பதிலளிக்க மறுக்கிறது.
பாமகவிடம் 40 சட்டப் பேரவை உறுப்பினா்கள், 5 மக்களவை உறுப்பினா்கள் இருந்திருந்தால், நமது கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்க முடியும் என்றாா்.
கூட்டத்தில் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஒட்டுக் கேட்பு கருவி: கூட்டம் முடிந்த பின்னா் செய்தியாளா்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதை யாா் வைத்தாா்கள்?, எதற்காக வைத்தாா்கள்? என்பது தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.