தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியில் கடலூா் மாநகராட்சியுடன் இணைந்து சிட்டி கிளினிங் ஒப்பந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் கீழ் சுமாா் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம். இதனால், தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்து, தூய்மைப் பணியாளா்கள் பணிகளை புறக்கணித்து கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சிட்டி கிளினிங் ஒப்பந்த நிறுவனத்தினா், இரண்டு நாள்களில் ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்தனா். ஆனால், அதை ஏற்க மறுத்து தூய்மைப் பணியாளா்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அந்த நிறுவனத்தினா் தூய்மைப் பணிக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனா்.
தொடா்ந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன்பேரில், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனா்.