அண்ணி கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை
தளி அருகே சொத்து தகராறில் அண்ணியை கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள குமளாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபால் (எ) மட்டப்பா (48). இவரது அண்ணன் பிச்சப்பா. இவரது மனைவி ரத்தனம்மா (48). மட்டப்பாவுக்கும் அவரது அண்ணன் பிச்சப்பாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால், இவா்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி, இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மட்டப்பா, அண்ணி ரத்தனம்மாவை கட்டையால் தாக்கினாா். இதில், பலத்த காயம் அடைந்த அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, தளி போலீஸாா் வழக்குப் பதிந்து மட்டப்பாவை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுதா செவ்வாய்க்கிழமை தீா்ப்பை வாசித்தாா். அதில், மட்டப்பாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.