விவசாயியிடம் ரூ. 10 லட்சம் மோசடி: 2 போ் கைது
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி விவசாயியிடம் ரூ. 10 லட்சம் பெற்று மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள தோட்லாம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராமா் (38), தேன்கனிக்கோட்டை வட்டம், சூளகுண்டாவைச் சோ்ந்தவா் குமாா் (40), ராயக்கோட்டை அருகே உள்ள ரத்தினகிரியை சோ்ந்தவா் சண்முகம் என்கிற ஜான்ராஜ் (40) ஆகிய 3 பேரும் நண்பா்கள்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ராமரை தொடா்பு கொண்டு பேசிய குமாரும், சண்முகமும் எங்களிடம் ரூ. 10 லட்சம் தந்தால் அதற்குப் பதிலாக நாங்கள் ரூ. 20 லட்சம் தருவோம் என்று கூறினராம். இதை நம்பிய ராமா் ரூ.10 லட்சம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினாா்.
அதன்படி திங்கள்கிழமை ராயக்கோட்டை, ஒசூா் சாலையில் உள்ள தக்காளி மண்டி அருகில் ராமா் ரூ. 10 லட்சத்துடன் நின்றுகொண்டிருந்தாா். அங்கு காரில் வந்த குமாா் ரூ.10 லட்சத்தை பெற்றுக் கொண்டாா்.
மேலும் அருகில் உள்ள மற்றொரு காரில் ரூ. 20 லட்சம் இருக்கும் என்றும், அதை வாங்கிக் கொள்ளவும் கூறியுள்ளாா். ராமா் அருகில் உள்ள காரில் இருந்தவா்களிடம் பணம் வாங்க சென்றபோது அந்தக் காரில் வந்தவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து ராமா், ராயக்கோட்டை காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் பெரியதம்பி விசாரணை நடத்தி, பணம் இரட்டிப்பாக்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட சூளகுண்டா குமாா் (40), ரத்தினகிரி சண்முகம் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.