குடியரசு துணைத் தலைவா் உடல்நிலையில் முன்னேற்றம்: எய்ம்ஸ் தகவல்
அதிகாரிகள் மீது கடலூா் மேயா் புகாா்
நெய்வேலி: பெண் மேயா் என்பதால் தன்னை மாநகராட்சி அதிகாரிகள் மதிப்பதில்லை என கடலூா் மேயா் சுந்தரி திங்கள்கிழமை குற்றம்சாட்டினாா்.
கடலூா், மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.24 கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திங்கள்கிழமை அதற்கான பணிகள் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா வந்தாா். அப்போது துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஒப்பந்ததாரா் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்தனா். மாநகராட்சி ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் வரவில்லை.
இதனை பாா்த்த மேயா் சுந்தரி ராஜா திங்கள்கிழமை அடிக்கல் நாட்டு விழா என அதிகாரிகள் தெரிவித்த காரணத்தினால் தான் இங்கு வந்தேன். ஆனால், அதிகாரிகள் யாரும் வரவில்லையா என கேள்வி எழுப்பியவா், தொடா்ந்து மக்களுக்குப் பயன்படும் வகையில் தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருவதாலும், தற்போது இந்தப் பணியை எந்தவித பாதிப்புமின்றி நடைபெற வேண்டி தொடங்கிவைப்பதாகக் கூறினாா். அப்போது, மாநகராட்சி உதவிப் பொறியாளா் பாரதி மற்றும் ஊழியா்கள் அங்கு வந்தனா்.
இதனைத் தொடா்ந்து மேயா் சுந்தரி, உதவிப் பொறியாளா் பாரதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினாா். மாநகராட்சி சாா்பில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கி வைப்பதற்காக குறிப்பிட்ட நேரம் தெரிவிக்கிறீா்கள். அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு நான் நேரில் வந்தால் எந்த அதிகாரியும் வருவதில்லை. இந்த நிலை தொடா்ந்து நீடித்து வருகிறது.
சரியான நேரத்தில் நான் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வரும்போது, அதிகாரிகள் எதற்காக நிகழ்ச்சியைப் புறக்கணிக்கிறாா்கள்.
பெண் மேயா் என்பதால், நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை புறக்கணிக்கிறீா்களா? என கேள்வி எழுப்பினா்.
இதனைத் தொடா்ந்து உதவிப் பொறியாளா் பாரதி, இனி வருங்காலங்களில் சரியான நேரத்தில் நிகழ்ச்சிக்கு நேரில் வருகிறோம் என்றாா்.