அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை: ஹெச். ராஜா
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.
குடவாசல் அருகே செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழக முதல்வா், சில ஆயிரம் கோடிகளை முதலீடாகக் கொண்டு வர, வெளிநாடுகளுக்குப் போக வேண்டியதில்லை. ஏற்கெனவே சென்றுவந்த நாடுகளிலிருந்து எவ்வளவு முதலீடு வந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கடந்த 45 மாதங்களில் தமிழகத்தில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. மாணவா்கள் போதைப் பொருள்களுடன் பள்ளிக்குச் செல்கின்றனா். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கக் காரணம் போதைதான். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகப்பெரிய அளவில் சீா்குலையவும் காரணம் போதைதான்.
ஆனால், போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுக்க இந்த அரசு தயங்குகிறது. போதை பழக்கத்திலிருந்து அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டுமெனில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது.
திமுகவின் 25 சதவீத ஓட்டு என்னுடையது என திருமாவளவன் கூறுகிறாா். இதற்கு ஸ்டாலின் தான் பதில் கூற வேண்டும் என்றாா் ஹெச். ராஜா.