ஹமாஸின் மூத்த தலைவர் பலி; 6 நாள்களில் 600 பேர் உயிரிழப்பு - மீண்டும் தொடங்கிய இஸ...
அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லாத சன்ரைசர்ஸ்; தாக்குப்பிடிக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்?
ஐபிஎல் தொடரில் நாளை (மார்ச் 23) நடைபெறும் போட்டியில் வலுவான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பந்துவீச்சில் சற்று பலவீனமாக உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொள்ள உள்ளன.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று (மார்ச் 22) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸின் இலக்கு இதுதான்; ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?
தொடரின் இரண்டாம் நாளில் நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொள்கின்றன. இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
தாக்குப்பிடிக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்?
கடந்த சீசனில் அதிரடியில் மிரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த முறையும் மிகுந்த வலுவான அணியாக உள்ளது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிரணிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர்.
உலக கிரிக்கெட்டில் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்களாக அறியப்படும் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசன் போன்ற வீரர்கள் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்குக்கு வலிமை சேர்க்கின்றனர். கடந்த சீசனில் அதிரடியில் மிரட்டிய சன்ரைசர்ஸ் மூன்று முறை 250-ரன்களுக்கும் அதிகமாக குவித்தனர். மேலும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியால் மட்டுமே 300 ரன்களை எடுக்க முடியும் எனக் கூறப்பட்டது. அந்த அளவுக்கு அவர்களது பேட்டிங் வரிசை மிகவும் வலுவாக உள்ளது.
கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் 287 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. 13 ரன்களில் 300 ரன்கள் குவிக்கும் வாய்ப்பை சன்ரைசர்ஸ் தவறவிட்டது. ஆனால், இந்த முறை சன்ரைசர்ஸ் 300 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டு நிதீஷ் குமார் ரெட்டி அணியில் இணைந்துள்ளது அணியை மேலும் வலுவாக்கியுள்ளது.
இதையும் படிக்க: ரோஹித்துக்கு இருக்கும் சுதந்திரம் கோலிக்கு இல்லை..! முன்னாள் ஆஸி. கேப்டனின் விரிவான பேட்டி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பந்துவீச்சு வரிசை ஆழமாக இல்லை. இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை தவிர்த்து அந்த அணியில் பெரிய அளவில் பந்துவீச்சில் அழுத்தத்தை ஏற்படுத்தும் வீரர்கள் இல்லை. நாளைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில், 300 ரன்கள் குவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
காயத்திலிருந்து மீண்டு அணியில் இணைந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்படப் போவதில்லை. ரியான் பராக் கேப்டனாக அணியை வழிநடத்தவுள்ளார். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங்கும் செய்யப்போவதில்லை எனக் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஜோஸ் பட்லர் விடுவிக்கப்பட்டது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதீஷ் ராணா, ஷிம்ரன் ஹெட்மேயர் மற்றும் துருவ் ஜுரெல் போன்ற தரமான வீரர்கள் இருக்கின்றனர். இருப்பினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவர்களைக் காட்டிலும் மிகவும் வலுவாக உள்ளது. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலுமே சன்ரைசர்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிக்க: கிரிக்கெட் பந்தின் மீது உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதித்தது நல்லதா? வில்லியம்சன் குழப்பம்!
சன்ரைசர்ஸ் அணியில் அதிக அளவிலான அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாததது கடந்த சீசனில் அந்த அணியின் பலவீனமாக இருந்தது. ஆனால், இந்த முறை கேப்டன் பாட் கம்மின்ஸுடன் அணியில் மிகுந்த அனுபவமிக்க முகமது ஷமி பந்துவீச்சில் இணைந்துள்ளார். சுழற்பந்துவீச்சை பொருத்தவரையில், ஆடம் ஸாம்பா அணிக்கு வலு சேர்க்கிறார். அதனால், சன்ரைசர்ஸ் அணி இந்த முறை பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக உள்ளது. அணி சமபலத்துடன் உள்ளது.
கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி, நாளை நடைபெறவுள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக தாக்குப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.