CSK vs MI : ஹர்திக், பும்ரா இல்லாத மும்பை சிஎஸ்கேவிடம் தாக்குப்பிடிக்குமா? |Match Preview
'எல் க்ளாசிக்கோ!'
சென்னையும் மும்பையும் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மோதவிருக்கின்றன. இந்த சீசனில் நேற்று ஒரு போட்டி நடந்துவிட்டது. இன்று மாலை ஒரு போட்டி இருக்கிறது. மூன்றாவது போட்டிதான் சென்னை Vs மும்பை இடையேயான போட்டி. ஆனால், ரசிகர்கள் பலரும் அந்த இரண்டு போட்டிகளையும் மறந்துவிட்டு இதுதான் முதல் போட்டி என்பது போன்ற ஆர்வத்தோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். காரணம், இரண்டு அணிகளுக்கும் இடையேயான ரைவல்ரி. இப்போது வேண்டுமானால் CSK vs RCB போட்டிக்கு ஒரு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கலாம். ஆனால், எப்போதுமே ரசிகர்கள் நரம்பு புடைக்கும் அளவுக்குக் காத்திருக்கும் போட்டி சென்னை Vs மும்பை எல் க்ளாஸிக்கோ போட்டிதான்.

இந்த முறையும் இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருந்தாலும், முதல் போட்டியில் மும்பை அணி சில வீரர்களைத் தவறவிடுகிறது. ஹர்திக் ஒரு போட்டியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். பும்ரா காயத்திலிருந்து மீளவில்லை. முக்கியமான வீரர்கள் இல்லாமல் சென்னை அணி மும்பையை சமாளித்துவிடுமா?
சென்னையும் மும்பையும் இதுவரைக்கும் 37 முறை நேருக்கு நேர் மோதியிருக்கின்றனர். அதில் 20 முறை மும்பை வென்றிருக்கிறது. 17 முறை சென்னை வென்றிருக்கிறது. அதேமாதிரி, சேப்பாக்கம் மைதானத்திலும் சென்னையும் மும்பையும் மோதிய போட்டிகளில் மும்பை 5 முறையும் சென்னை 3 முறையுமே வென்றிருக்கின்றனர். ரெக்கார்டுகள் எல்லாமே மும்பைக்கு சாதகமாகத்தான் இருக்கின்றன.
'பிட்ச்சின் தன்மை!'
இரண்டு அணிகளுக்குமே சென்னையின் பிட்ச்சை கணிப்பதும் அதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதும்தான் பிரச்னையாக இருக்கும். ஏனெனில், சேப்பாக்கம் மைதானம் என்றவுடனேயே எல்லாரும் ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச் என்றே நினைப்பார்கள். ஒரு காலத்தில் அது உண்மைதான். ஆனால், சமீபமாக அப்படியில்லை. கடந்த சீசனில் ப்ளாட்டான பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்சே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் சென்னை அணியின் ஸ்பின்னர்களே விக்கெட் எடுக்க முடியாமல் திணறினார். போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ருத்துராஜ், 'எனக்கும் பிட்ச் எப்படி இருக்கப்போகிறதென தெரியவில்லை. என்னாலும் கணிக்க முடியவில்லை. ஆனால், பேட்டிங் பௌலிங் எதற்கு சாதகமாக இருந்தாலும் நாங்கள் அதை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்.' என ருத்துராஜ் கெய்க்வாட் பேசியிருந்தார்.

ருத்துராஜ் சொல்வதைப் போல சென்னை அணி எப்படியான பிட்ச்சுக்கும் தயாராக இருப்பதாகவே தெரிகிறது. அஷ்வின், ஜடேஜா, நூர் அஹமது என மூன்று திடகாத்திரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச் எனில் இவர்கள் போட்டியை மாற்றிவிடுவார்கள். அதேமாதிரி, பேட்டிங்கிலுமே பெரிய பட்டாளமே இருக்கிறது. ருத்துராஜ், கான்வே, ரச்சின், ராகுல் திரிபாதி, சிவம் துபே, தோனி, ஜடேஜா என இந்த லைன் அப் க்ளிக் ஆனால் மிரட்டிவிடுவார்கள்.
சில பிரச்னைகள் இருப்பதையும் மறுக்க முடியாது.
கான்வேயையும் ரச்சினையும் ஒரு சேர லெவனில் எடுக்க முடியுமா என்பது கேள்வி. அப்படி எடுத்தால் பௌலிங்க் லைன் அப்பில் அடி விழும். அதேமாதிரி, பதிரானவின் பார்ம் எப்படியிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். SAT20 தொடரில் அவரது ஆக்சனை மாற்றி வீசி பெயிலர் ஆகியிருந்தார். இங்கே என்ன செய்யப்போகிறார்? அவரை சென்னை அணி எப்படி ஹேண்டில் செய்யப்போகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

'மும்பையின் பலவீனஙகள்!'
மும்பை அணியுமே கிட்டத்தட்ட சென்னைக்கு ஈடான பலத்துடன் இருக்கிறது. ஆனால், ஹர்திக் இல்லை. பும்ரா இல்லை. இருவருமே மேட்ச் வின்னர்கள். அவர்கள் இல்லாமல் இருப்பது பிரச்னையே. கடைசிக்கட்ட ஓவர்களில் ஹர்திக் அடிக்கும் ரன்களை மும்பை தவறவிடும். அதேமாதிரி, அவரின் ஓவர்களையும் தவறவிடுவார்கள். பும்ராவும் இல்லையே. அதனால் டெத் பௌலிங்கும் கொஞ்சம் பிரச்னைதான். ஹர்திக் இருந்தால் கூட கடைசியில் ஸ்லோயர் ஒன்களை வீசி சமாளிப்பார். இவர்கள் இல்லை என்பதால் தீபக் சஹாரும் ட்ரெண்ட் போல்டும் பவர்ப்ளேயில் கூடுதல் சிரத்தை எடுத்து வீச வேண்டும்.
பவர்ப்ளேயில் ட்ரெண்ட் போல்டுக்கு எதிராக ருத்துராஜ் இதுவரை திணறியிருக்கிறார். சென்னை வெல்ல வேண்டுமெனில் ருத்துராஜ் நின்று சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைப்பது முக்கியம். அதனால் ட்ரெண்ட் போல்டை கொஞ்சம் பார்த்துதான் ஆடியாக வேண்டும். அதேமாதிரி, மும்பை அணியின் கேப்டன் சூர்யா ஜடேஜாவுக்கு எதிராகவும் பதிரனாவுக்கு எதிராகவும் நல்ல ரெக்கார்டை வைத்திருக்கவில்லை. அவரும் இவர்களை கொஞ்சம் பார்த்துதான் ஆடியாக வேண்டும்.

பிட்ச்சின் தன்மையை எந்த அணி சீக்கிரம் கணித்து அதற்கேற்ப புரிந்து ஆடுகிறதோ அந்த அணிதான் இன்றைய போட்டியை வெல்லக்கூடும்.
இன்றைய ஆட்டத்தின் Key Player யாராக இருப்பார். எந்த அணி வெல்லும் என்பதைக் கமென்ட்டில் தெரிவிக்கவும்.