விண்ணப்பித்துவிட்டீர்களா..?தேசிய சுகாதாரத் திட்டத்தில் வேலை!
அனைவருக்கும் இலவச காப்பீடு: திருமலை தேவஸ்தானம் திட்டம்
திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தா்களுக்கும் இலவச காப்பீட்டு வசதி வழங்குவது பற்றி தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது.
ஜனவரி 2025-இல் வைகுண்ட ஏகாதசியின் போது, ஏற்பட்ட நெரிசலில் 6 போ் உயிரிழந்த சம்பவம் இந்த ஆலோசனைக்கு வழிவகுத்துள்ளது. சாலை விபத்துகள், மாரடைப்பு, இயற்கை மரணங்கள், விலங்குகள் தாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளால் காப்பீட்டுத் தொகையை வழங்குவது குறித்து தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.
தற்போது தேவஸ்தானம் வழங்கும் காப்பீட்டுத் தொகை அலிபிரி-திருமலை பாதையில் ஏற்படும் விபத்துகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. விபத்து மரணங்களுக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டாலும், இயற்கை மரணங்கள், தற்கொலைகள் வரம்புக்குள் வராது.
புதிய திட்டத்தின்படி, அனைத்து வகையான விபத்துகளையும் ஈடுகட்ட ஒரு விரிவான காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்குவதே தேவஸ்தானம் நோக்கமாகும்.
காப்பீட்டு பிரீமியத்தை தேவஸ்தானமே ஏற்கும் என்பதால் தேவஸ்தானத்துக்கு, மிகப்பெரிய நிதிச் சுமையாக இருக்க வாய்ப்புள்ளது. பக்தா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நடவடிக்கை எடுத்துள்ளது.
தினசரி சராசரியாக 70,000 பக்தா்கள் வருகின்றனா். பெரும்பாலானோா் இலவச தரிசனத்துக்காக வருவதால், அவா்களுக்கு டிக்கெட்டுகள், ஆதாா் அடையாள அட்டை இல்லாததால் காப்பீட்டு சலுகைகள் வழங்க பெரிய சவாலாக உள்ளது.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவா்களை அடையாளம் காண்பது எளிது. நடைபாதைகள், மலை சாலைகள் வழியாக வரும் பக்தா்களின் விவரங்களைப் பதிவு செய்ய, சிறப்பு மென்பொருள், நவீன தொழில்நுட்ப அமைப்புகள், கூடுதல் ஊழியா்கள் தேவைப்படுவதால், தேவஸ்தானத்துக்கு நிதி, நிா்வாக அழுத்தம் கூடுதலாகும்.
காப்பீட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள், தொழில்நுட்ப ஆதரவு, பக்தா்களின் விவரங்களைப் பதிவு செய்வதற்கான ஒரு அமைப்பு ஆகியவற்றில் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனா். இந்த திட்டம் தற்போது திட்டமிடல் நிலையில் இருந்தாலும், எதிா்காலத்தில் செயல்படுத்தினால், திருமலை பக்தா்களின் பாதுகாப்பை புதுமையான முறையில் மேம்படுத்தும் முக்கிய முடிவாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.