ஐயப்பனை தரிசிக்கும் Sathiq Ali | அழுதா ஏறும்போது நிகழ்ந்த அற்புதம் | Vikatan
அப்துல் கலாமின் செய்தித் தொடா்பாளா் எஸ்.எம்.கான் மறைவு: பிரதமா் இரங்கல்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் செய்தித்தொடா்பு செயலாளரும் ஓய்வுபெற்ற இந்திய தகவல் சேவைகள் (ஐஐஎஸ்) துறை அதிகாரியுமான எஸ்.எம்.கான் மறைவுக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா்.
மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக கயானாவில் உள்ள பிரதமா் மோடி வியாழக்கிழமை எஸ்.எம்.கானின் குடும்பத்துக்கு இரங்கல் செய்தியை தெரிவித்தாா்.
அதில், ‘இந்திய தகவல் சேவைகள் துறை மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றிய கான் ஒரு கடின உழைப்பாளி. மிகவும் அனுபவம் வாய்ந்த அவா் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை அா்ப்பணிப்புடன் செய்து முடிப்பவராக அனைவராலும் அறியப்படுவாா். அவரின் மறைவு சமூகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது நினைவுகள் மற்றும் மகத்தான பங்களிப்புகள் அவரது குடும்பத்துடன் எப்போதும் இருக்கும்’ என குறிப்பிட்டாா்.
உடல்நலக் குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கான் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் செய்தித்தொடா்பு செயலராக பதவி வகிக்கும் முன் சிபிஐ செய்தித்தொடா்பாளராக அவா் 15 ஆண்டுகள் பணியாற்றினாா்.
அப்போது, ஃபோபா்ஸ் ஊழல், பங்குச் சந்தை முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் குறித்து சிபிஐயின் நடவடிக்கைகளை அவா் ஊடகங்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தாா்.
அப்துல் கலாமின் பதவிக் காலத்துக்குப் பின்பு, தூா்தா்ஷன் தொலைக்காட்சியின் தலைமை இயக்குநராக அவா் பொறுப்பேற்றாா். பொது மக்களுக்கு அப்துல் கலாம் ஆற்றிய சேவைகளை விளக்கும் விதமாக ‘மக்களின் குடியரசுத் தலைவா்’ என்ற தலைப்பில் அவா் எழுதிய புத்தகத்தை பிரதமா் மோடி வெளியிட்டாா்.