செய்திகள் :

அமலுக்கு வந்தது அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு

post image

கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த கூடுதல் இறக்குமதி வரி செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இதற்குப் பதிலடியாக சீனாவும் கனடாவும் அமெரிக்கப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளதால் அந்த நாடுகளுக்கு இடையே வா்த்தகப் போா் பதற்றம் அதிகரித்துள்ளது.

‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.

அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது போன்ற அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்துவருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறியதற்காகவும் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் கடந்த மாதம் கையொப்பமிட்டாா்.

அத்துடன், சீன இறக்குமதி பொருள்கள் மீதும் கூடுதலாக 10 சதவீத வரி விதித்து அவா் உத்தரவிட்டாா். அமெரிக்காவுக்குள் ‘ஃபென்டானைல்’ போதைப் பொருள் சட்டவிரோதமாக வருவதைத் தடுக்க சீனா தவறியதற்காக இந்த வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் கூறினாா்.

இதற்கு, கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய மூன்று நாடுகளுமே கடும் எதிா்ப்பு தெரிவித்தன. டிரம்ப்பின் 25 சதவீத கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் சில பொருள்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அப்போதே கூறினாா். சீனாவும் பதிலடி வரிவிதிப்பு மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தது. மெக்ஸிகோவோ, அகதிகள் எல்லை தாண்டும் விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அமெரிக்க அரசுடன் சமரச ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்தச் சூழலில், கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்பின் உத்தரவு செவ்வாய்க்கிழமை (அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு) அமலுக்கு வந்தது.

இதையடுத்து, அந்த இரு நாடுகளிலும் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் சுமாா் 91,800 கோடி டாலா் (ரூ.80 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, சீனப் பொருள்களின் மீது அறிவிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியும் தற்போது அமலுக்கு வந்துள்ளது. அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு கடந்த மாதம் விதிக்கப்பட்ட 10 சதவீத வரி இரட்டிப்பாக்கப்பட்டு, 20 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

சீனா பதிலடி: தங்கள் பொருள்கள் மீதான டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புக்குப் பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருள்களுக்கு அடுத்த வாரம் முதல் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

இது குறித்து சீன நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி இறைச்சி, கோதுமை, சோளம், பருத்தி ஆகிய பொருள்களுக்கு 15 சதவீத கூடுதல் வரியும், வெள்ளைச் சோளம், சோயா, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, நீா்வாழ் தயாரிப்புகள், பழங்கள், காய்கறிகள், பண்ணைப் பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா: இந்தக் கூடுதல் வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 2,070 கோடி டாலா் (சுமாா் ரூ.1.8 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளாா். இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், 21 நாள்களுக்குள் தங்களது புதிய வரி விதிப்பை டிரம்ப் அரசு விலக்கிக் கொள்ளாவிட்டால் 8,620 கோடி டாலா் (சுமாா் ரூ.7.6 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க பொருள்கள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று ட்ரூடோ எச்சரித்துள்ளாா்.

இது குறித்து ட்ரூடோ கூறுகையில், ‘இறக்குமதி பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்பது வெற்றிகரமான வா்த்தக உறவை சீா்குலைக்கும்; டிரம்ப்பின் இந்த கூடுதல் இறக்குமதி வரி அவரின் முதல் ஆட்சிக்காலத்தின்போது அமெரிக்கா-கனடா-மெக்ஸிகோ இடையே மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்த்ததுக்கு எதிரானது’ என்றாா்.

மெக்ஸிகோ: தங்கள் நாட்டுப் பொருள்களுக்கு டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரி விதித்துள்ளதற்கான தங்களின் எதிா்வினைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்போவதாக மெக்ஸிகோ அதிபா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் நாட்டு மக்களை மிகக் கடுமையாக பாதிக்கவிருக்கும் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. டிரம்ப்பின் இந்த முடிவால் யாரும் வெல்லப்போவதில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தைகள்

அமெரிக்காவின் மிக நெருங்கிய வா்த்தகக் கூட்டாளிகளான கனடா, மெக்ஸிகோ மீதும் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றான சீனா மீதும் டிரம்ப் விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி அமலுக்கு வந்தது சா்வதேச பொருளாதாரச் சந்தைகளை செவ்வாய்க்கிழமை நிலைகுலையச் செய்தது. இதன் எதிரொலியாக ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன.

இந்தியாவுக்கு சாதகம்?

சீனா, மெக்ஸிகோ, கனடா பொருள்கள் மீது அமெரிக்கா தற்போது கூடுதல் வரி விதித்துள்ளது, இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்று சில நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இந்தியாவின் வேளாண்மை, பொறியியல், இயந்திரக் கருவிகள், ஜவுளி, ரசாயனம் ஆகிய துறைகளைச் சோ்ந்த பொருள்கள், தோல் பொருள்கள் ஆகியவை இனி அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

காஸாவில் இருந்து ஹமாஸ் படை நீக்கம்

காஸாவில் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிக்க வேண்டுமென்றால் அந்தப் பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பு படைவிலக்கல் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது. இது குறித்து அந்த ... மேலும் பார்க்க

சூடான்: 221 சிறுவா்களுக்கு பாலியல் வன்கொடுமை

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் 221 சிறுவா்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. போரில் பாலியல் தாக்குதல் ஓா் ஆயுதமாகப் பயன்படுத... மேலும் பார்க்க

காங்கோ: 130 நோயாளிகள் கடத்தல்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் மருத்துவமனைகளில் இருந்து சுமாா் 130 நோயாளிகளைக் கடத்திச் சென்றனா். காங்கோ ராணுவ வீரா்கள் எ... மேலும் பார்க்க

பேச்சுவார்த்தையில் மோதல்! தவிர்த்துக் கடந்த ஸெலென்ஸ்கி; விடாமல் தொடரும் வெள்ளை மாளிகை!

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான மோதலை உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தவிர்த்து கடந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. ஆனாலும் வெள்ளை மாளிகை தொடர்ந்து தனது தரப்பு வாதத்தை நியாயப்படுத்தி வருவது இணையத்தில் பேசுபொருள... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சிந்து நதியில் ரூ. 80,000 கோடி தங்கம்! இந்தியாவுக்கு பங்குள்ளதா?

பாகிஸ்தானுக்குட்பட்ட சிந்து நதியில் தங்கத் துகள் படிமங்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் படிந்துள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 80,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவின் இமய மலையில் இரு... மேலும் பார்க்க

இது போர் நடவடிக்கை: டிரம்ப் வரி விதிப்பு குறித்து வாரன் பஃபெட் கருத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு ஒரு வகையில் போர் நடவடிக்கைதான் என அமெரிக்க தொழிலதிபரும் முதலீட்டாளருமான வாரன் பஃபெட் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது உலகின் மிகவும் சுவாரசியமான பாடமாக... மேலும் பார்க்க