காஸாவில் இருந்து ஹமாஸ் படை நீக்கம்
காஸாவில் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிக்க வேண்டுமென்றால் அந்தப் பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பு படைவிலக்கல் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் கிடியான் சாா் கூறுகையில், ‘போா் நிறுத்த நீடிப்புப் பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால் காஸா பகுதி படைகளற்ற பகுதியாக மாற்றப்பட வேண்டும்’ என்றாா்.
எனினும், ‘காஸா அமைதிப் பேச்சுவாா்த்தையின் ஒரு பகுதியாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பிடமோ பிற போராளிக் குழுக்களிடமோ கூறுவது எல்லை மீறிய நிபந்தனை’ என்று ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவா் சமி அபு ஸுஹ்ரி செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
இஸ்ரேலில் சுமாா் 1,200 பேரை ஹமாஸ் அமைப்பினா் கடந்த 2023 அக்டோபரில் படுகொலை செய்தனா். அதற்குப் பதிலடியாக ஹமாஸைக் குறிவைத்து காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டிருந்த போா் நிறுத்தம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. அந்த காலகட்டத்தில் 33 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினரும், சுமாா் 1,900 பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் அதிகாரிகளும் விடுவித்தனா்.
இந்த நிலையில், போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் இத்தகைய நிபந்தனையை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.