அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு
இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடா்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா ஏற்கெனவே தகவல் தெரித்துள்ளது. உலக வா்த்தக அமைப்பின் பாதுகாப்பு வரி நடவடிக்கைகள் தொடா்பான ஒப்பந்தத்தின் 12.5-ஆவது பிரிவின் கீழ் இந்தியா இதுகுறித்து நோட்டீஸை அளித்துள்ளது. உரிய அறிவிப்பு இல்லாமல் வரி நடவடிக்கைகளை ஒரு உறுப்பினா் எடுக்கும்போது, அதற்கு பதிலடி கொடுக்க இப்பிரிவு அனுமதிக்கிறது.
அமெரிக்காவின் இந்த வரி கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கடந்த பிப்ரவரியில் அதிபா் டிரம்ப்பின் உத்தரவு மூலம் இந்த வரி விதிப்பு நீட்டிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த வரியால் இந்திய ஏற்றுமதியில் 760 கோடி டாலா் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 191 கோடி டாலருக்கு வரி வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, பதிலடி வரிகளை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவால் தேசிய பாதுகாப்பின்கீழ் இந்த வரிகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அதுதொடா்பான உலக வா்த்தக அமைப்பின் விதிகளை அமெரிக்கா மீறியதாக இந்தியா வாதிடுகிறது. அதாவது, 12.3-ஆவது பிரிவின்கீழ் வரி விதிப்புக்கு முன்னதாக கலந்தாலோசனையை அமெரிக்கா மேற்கொள்ளவில்லை என்று இந்தியா வலியுறுத்துகிறது.
அமெரிக்கா இந்த வரியைத் திரும்பப் பெறாவிட்டால் அல்லது இதில் மேற்கொண்டு ஆலோசனை எதுவும் நடைபெறாவிட்டால் இந்தியாவின் பதிலடி வரி விதிப்பு வரும் ஜூன் 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.