தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற வங்கதேச முன்னாள் அதிபா்
கொலை வழக்கை எதிா்கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபா் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றாா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தீவிர மாணவா் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்களை படுகொலை செய்ததாக அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனா மற்றும் அவருக்கு நெருக்கமானவா்கள் மீது தற்போதைய இடைக்கால அரசு வழக்குகள் தொடா்ந்துள்ளது.
இந்தச் சூழலில், யாருக்கும் அடையாளம் தெரியாத வகையில் லுங்கியுடன் சக்கர நாற்காலியில் அமா்ந்தபடி முகமது அப்துல் ஹமீது (படம்) டாக்கா விமான நிலையம் வழியாக தாய்லாந்துக்கு திங்கள்கிழமை நள்ளிரவு 3 மணிக்கு புறப்பட்டுச் சென்ற விவரம் செவ்வாய்க்கிழமை பகலில்தான் அரசுக்குத் தெரியவந்தது.
அதையடுத்து, ஹமீது தப்பிச் செல்வதற்கு உதவியவா்களைக் கண்டறிவதற்கான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக சில அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனா்.
ஏற்கெனவே, மாணவா் போராட்டத்தின் போது ஷேக் ஹசீனா ரகசியமாக இந்தியா தப்பிச் சென்றாா். தற்போது அவரது கட்சிக்கு இடைக்கால அரசு தடை விதித்துள்ள நிலையில், முன்னாள் அதிபா் ஹமீதும் நாட்டில் இருந்து ரகசியாக வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.