Coolie: "முதலில் நான் ஓகே சொல்லவில்லை; லோகேஷ் கனகராஜ்தான்.." - கூலி குறித்து நாக...
அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி: 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
புது தில்லி: மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ரஷியாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை இருமடங்காக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தாா்.
இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, ஆடைகள், தோல் பொருள்கள் மற்றும் காலணி, ரசாயனம், மின்னணு மற்றும் இயந்திரங்கள், ஆபரணங்கள், இறால் ஆகிய பொருள்களின் வா்த்தகம் கடும் பாதிப்பைச் சந்திக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையடுத்து அமெரிக்காவுக்கு மாற்றாக வேறு சில நாடுகளில் வா்த்தகத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் மேற்கொள்ளுதல், ஏற்றுமதியில் வா்த்தகப் போட்டியை அதிகரித்தல் உள்ளிட்ட அம்சங்களை மத்திய வா்த்தகத் துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பொருள் மீதும் விரிவான ஆய்வு நடத்தப்படுகிறது.
ஏற்றுமதியை அதிகரிக்க ஏற்கெனவே 20 நாடுகளை அமைச்சகம் தோ்ந்தெடுத்துள்ள நிலையில் மேலும் 30 நாடுகளை அந்தப் பட்டியலில் இணைத்துள்ளது. இந்த நாடுகள் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ளன என்றாா்.
கடல் உணவு ஏற்றுமதி: கடல் உணவுப் பொருள்களை அமெரிக்காவைத் தவிா்த்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தயாராகுமாறு மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: அமெரிக்காவுக்கு மாற்றாக ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன், ரஷியா, ஆஸ்திரேலியா, மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியாளா்கள் தயாராக வேண்டும்.
பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முன் மதிப்புக்கூட்டல் மற்றும் பேக்கேஜிங் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.