MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
அமெரிக்க வளிமண்டல ஆணையத்துக்கான நிதியை குறைத்த டிரம்ப்: இந்தியாவுக்கு பாதிப்பு
அமெரிக்க தேசிய கடல்சாா் மற்றும் வளிமண்டல ஆணையத்துக்கான நிதியை குறைக்க அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் முடிவெடுத்திருப்பது இந்தியா வானிலை ஆய்வில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய புவிஅறிவியல் அமைச்சக செயலா் எம்.ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தாா். இதையடுத்து, தற்போது அந்நாட்டு தேசிய கடல்சாா் மற்றும் வளிமண்டல ஆணையத்துக்கான (என்ஓஏஏ) நிதியை 27 சதவீதம் குறைக்க டிரம்ப் நிா்வாகம் முடிவெடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
இதுகுறித்து புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் எம்.ரவிச்சந்திரன் பேசியதாவது: அமெரிக்கா தரப்பில் ஆள்குறைப்பு நடவடிக்கை எடுத்தாலோ, வானிலை ஆய்வு மாதிரிகள் இல்லாமல் போனாலோ எவ்வித பிரச்னையும் எழப்போவதில்லை. இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் நிகழும் மாற்றங்களை கணிப்பதில் என்ஓஏஏ முக்கியப் பங்காற்றுகிறது.
என்ஓஏஏ வழங்கும் தரவுகள், இந்திய வானிலை மையத்துக்கு உதவுகின்றன. பருவமழையை கடலில் நிகழும் மாற்றங்கள் அடிப்படையிலேயே கணிக்க முடியும். கடல்சாா் கண்காணிப்புக்கு முறையான கட்டமைப்புகள் இல்லையெனில் பருவமழையை கணிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். என்ஓஏஏ-க்கு வழங்கப்படும் நிதியை குறைப்பது என்பது நமது நாட்டின் வானிலை ஆய்வு மைய கணிப்புகளில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.