அமைதிப் பேச்சு நிறுத்திவைப்பு: ரஷியா
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது:
தற்போதைய நிலையில், உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான பேச்சுவாா்த்தைகளை மேற்கொள்வதற்கான தகவல் இணைப்பு வாயில்கள் திறந்துதான் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி எங்களது பிரதிநிதிகள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.
இருந்தாலும், இப்போதைய நிலையில் நாங்கள் உக்ரைன் அமைதிப் பேச்சுவாா்த்தைகளை நிறுத்திவைத்துள்ளோம்.
போா் நிறுத்த பேச்சுவாா்த்தைக்கு ரஷியா எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் தலையிட்டு அந்த பேச்சுவாா்த்தைகளில் முட்டுக்கட்டை போடுகின்றன. இதன் காரணமாகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.
முன்னதாக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் தனக்கு நட்புறவு இருந்தாலும் உக்ரைன் போரை அவா் முடிவுக்குக் கொண்டுவராமல் இருப்பது எரிச்சலை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறினாா்.
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: புதினிடம் காட்டிவரும் பொறுமையை நான் விரைவில் இழந்துவிடுவேன். ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள், கூடுதல் வரி விதிப்பு போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அத்தைய நடவடிக்கையை ஏற்கெனவே தொடங்கிவிட்டேன். ரஷியாவிடமிருந்து மிக அதிகமாக எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 50 சதவீத வரி கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளேன். இது அந்த நாட்டுடன் விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்றாா் டிரம்ப்.