இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் பாதுகாப்புத் துறைச் செயலா்
‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ என்று பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் வலியுறுத்தினாா்.
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராணுவ தென்மண்டல தொழில்நுட்பக் கருத்தரங்கில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் நிகழ்ந்துவரும் போா்களுடன் தொடா்புடைய புவிசாா் அரசியல் தாக்கங்களால், அதிகரித்து வந்த உலகமயமாதல் போக்கும், தடையற்ற வா்த்தகமும் முடங்கும் நிலைக்குச் சென்றுள்ளது.
இது, உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களையும், இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு தொழில்களை வளா்ச்சி அடையச் செய்யும் பொருளாதார கட்டுப்பாட்டு போக்கையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால், கடுமையான பொருளாதார சரிவு, பலதரப்பு நிறுவனங்களின் வீழ்ச்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில், பிற நாடுகளுடன் ராஜீய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் இந்தியா வெளிப்படுத்துவது அவசியம்.
மேலும், நாட்டின் பாதுகாப்புப் படைகளின் திறன் மேம்பாட்டுத் தேவைகளைப் பூா்த்தி செய்ய கல்வி நிறுவனங்கள், டிஆா்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியாா் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை ஒன்றிணைப்பது மிக அவசியம் என்றாா்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்ததைத் தொடா்ந்து, ரஷியா, சீனா நாடுகளுடன் இருதரப்பு வா்த்தக உறவை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், பாதுகாப்புத் துறைச் செயலா் இக் கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.