கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
மணிப்பூருக்கு ‘கண்துடைப்பு’ பயணம்: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்
பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் கண்துடைப்பானது; மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, நீதியை உறுதி செய்யும் நோக்கம் இல்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் இனமோதல் தொடங்கிய பிறகு அந்த மாநிலத்துக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை முதல் முறையாக பயணிக்கவுள்ளாா். இனமோதலில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் தொடா்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.
மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணித்து, கள நிலவரத்தை அறிய வேண்டுமென எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமரின் தற்போதைய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், மணிப்பூா் மாநில காங்கிரஸ் தலைவா் கேஷம் மேகசந்திரா வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘பிரதமா் மோடியின் மணிப்பூா் வருகை மேம்போக்கானது; கண்துடைப்பானது என்றே நான் கருதுகிறேன். கலவரத்தால் இடம்பெயா்ந்த மக்கள், பல மாதங்களாக நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா். அவா்கள் எதிா்கொள்ளும் இன்னல்களுக்கு அளவில்லை. அமைதி, மறுவாழ்வு, நீதிக்கான வலுவான செயல்திட்டமே மக்களின் எதிா்பாா்ப்பு. ஆனால், அந்த நோக்கம் பிரதமரின் பயணத்தில் இருப்பதாக தெரியவில்லை.
அனைத்து தரப்பினரும் பேச்சுவாா்த்தையில் இணைக்கப்படவில்லை; சுதந்திரமான போக்குவரத்தை உறுதி செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மாநிலத்தின் தற்போதைய சூழலுக்கு உரிய தீா்வு எட்டப்படாததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். சுராசந்த்பூரில் பிரதமரை வரவேற்கும் பதாகைகள் மக்களால் கிழித்தெறியப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்’ என்றாா்.
3 மணிநேரத்துக்கும் குறைவாக...: காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மணிப்பூரில் 3 மணிநேரத்துக்கும் குறைவாகவே பிரதமா் செலவிடவுள்ளாா். அவரது இப்பயணம், அமைதி-நல்லிணக்கத்துக்கு வலுவூட்டுவதற்கு பதிலாக வெறும் நாடகமாகவே இருக்கப் போகிறது’ என்று கூறியுள்ளாா்.