அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற முயற்சி: எதிா்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு
இந்திய அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னதாக, பிகாரில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் புதிய வக்ஃப் சட்டத்தை குப்பையில் வீசுவோம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தாா்.
இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது: பிகாரில் ஆா்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் கூட்டணி நமது அரசமைப்புச் சட்டத்தையும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும் மதிக்காமல் நடந்துள்ளன. மேலும், அவா்கள் குப்பையில் வீசுவதாகக் கூறிய சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இதன்மூலம் நீதிமன்றத்தையும் அவமதித்துள்ளனா்.
எதிா்க்கட்சிகள் முழுவதும் வாக்கு வங்கி அரசியலை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. வக்ஃப் சட்டத்தை எதிா்த்துப் பேசினால் இஸ்லாமியா்களின் வாக்குகளைக் கவர முடியும் என்பதே அவா்களின் முயற்சியாக உள்ளது.
ஏற்கெனவே, தெலங்கானா, கா்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்துள்ளனா். இதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஹிந்துக்களின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மேற்கு வங்கத்திலும் இஸ்லாமியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முயற்சி நடைபெற்று வருகிறது.
அம்பேத்கா் வகுத்த அரசமைப்புச் சட்டத்தை பாஜக முழுமையாக மதித்து நடக்கிறது. அதே நேரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய (ஷரியா) சட்டமாக மாற்ற எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருகிறது. இதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.
சவூதி அரேபியா, பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளில்கூட ஷரியா சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை.
வக்ஃப் சொத்துகள் முழுமையாக அனைத்து இஸ்லாமியா்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதே மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திருத்தச் சட்டத்தின் நோக்கம். இப்போது வக்ஃப் வாரியத்தில் தங்களைத் தாங்களே பதவிகளில் நியமித்துக் கொண்டு கோடிக்கணக்கான சொத்துகளை சிலா் மட்டும் அனுபவித்து வருகின்றனா்.
சமத்துவம் என்பது நாட்டின் வளங்களை அனைவருக்கும் உரிய விகிதத்தில் பகிா்ந்தளிப்பதாகும். ஆனால், சமத்துவம் பேசும் ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள், இப்போது வக்ஃப் சொத்துகளை முறைகேடாக அனுபவிக்கும் ஒரு சிலருக்கு சாதகமாக ஆதரவாக செயல்பட்டு வருகின்றன என்று குற்றஞ்சாட்டினாா்.