தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
அரசாங்க முடிவுகளை எடுக்கும் அதிகாரம் எலான் மஸ்க்கிற்கு இல்லை: வெள்ளை மாளிகை
எலான் மஸ்க் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் ஊழியர் இல்லை என்றும் அரசாங்க முடிவுகளை எடுக்கும் முறையான அதிகாரம் அவருக்கும் இல்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் உருவாக்கப்பட்ட அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் கீழ் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது பல்வேறு வழிகளில் அரசாங்க செலவினங்களைக் கடுமையாகக் குறைக்க உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
எலான் மஸ்க் அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையை வழிநடத்துவார் என கடந்த நவம்பர் மாதம் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இதையும் படிக்க | வரிவிதிப்பில் புதிய மாற்றங்களை அறிவித்த டிரம்ப்!
இந்த நிலையில், அரசு நிர்வாக அலுவலக இயக்குனர் ஜோஷ்வா ஃபிஷர் திங்களன்று (பிப். 17) தாக்கல் செய்த அறிக்கையில், ”மஸ்க் வெள்ளை மாளிகையின் தொழில்முறை அல்லாத சிறப்பு அரசு ஊழியர் மற்றும் அதிபரின் மூத்த ஆலோசகர்.
வெள்ளை மாளிகையின் மற்ற மூத்த ஆலோசகர்களைப் போலவே மஸ்க்கிற்கும் அரசாங்க முடிவுகளை எடுப்பதற்கான முறையான அதிகாரம் இல்லை. அவரால் அதிபருக்கு ஆலோசனை வழங்கவும் அதிபரின் உத்தரவுகளைத் தெரிவிக்கவும் மட்டுமே முடியும்" என்று ஃபிஷர் தெரிவித்தார்.
"அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் சேவை என்பது அமெரிக்க அதிபரின் நிர்வாக அலுவலகத்தின் ஒரு அங்கமாகும். அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் தற்காலிக சேவை அமைப்பு, அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து செயல்படும். இரண்டும் வெள்ளை மாளிகை அலுவலகத்திலிருந்து தனித்தனியே உள்ளன.
எலான் மஸ்க் வெள்ளை மாளிகை அலுவலகத்தின் ஊழியர். அவர் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் ஊழியர் அல்ல. மேலும், அவர் தற்காலிக நிர்வாகியும் அல்ல" என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.