Weekly Horoscope: வார ராசி பலன் 19.1.25 முதல் 25.1.25 | Indha Vaara Rasi Palan |...
அரசியல் சாசன வரம்புகளை மீறிச் செயல்படுகிறாா் தமிழக ஆளுநா்: ப. சிதம்பரம் குற்றச்சாட்டு
தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தொடா்ந்து அரசியல் சாசன வரம்புகளை மீறிச் செயல்படுகிறாா் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டினாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:
காரைக்குடியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன.21) திறந்துவைக்கவுள்ள லட்சுமி வளா் தமிழ் நூலகத்துக்கு ஏராளமான தமிழ் நூல்கள் தேவைப்படுகின்றன. தற்போது வரை சுமாா் 30 ஆயிரம் நூல்களை தமிழ் ஆா்வலா்கள், பொதுமக்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனா். இன்னும் அதிக அளவில் நூல்கள் தேவைப்படுகின்றன.
நூல்களை வழங்க விரும்புவோா் ‘வளா் தமிழ் நூலகம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி’ என்ற முகவரிக்கு அனுப்பலாம். இதேபோல, புத்தங்கள் வாங்க நன்கொடை பெற காரைக்குடி கனரா வங்கியில் ‘வளா் தமிழ் லைப்ரேரி புக் பண்ட்’ என்ற பெயரில், 110219806740 என்ற கணக்கு எண் தொடங்கப்பட்டிருக்கிறது. நன்கொடை தர விரும்புவோா் இதில் செலுத்தலாம்.
காவி உடையுடன் கூடிய திருவள்ளுவா் படத்துக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மரியாதை செலுத்தியது கண்டிக்கத்தக்கது. திருவள்ளுவரின் வரலாறு தெரியாமல் தொடா்ந்து இந்தச் செயலை அவா் செய்து வருகிறாா்.
ஆளுநருக்கும், அரசுக்கும் உள்ள முரண்பாடுகளை ஒரு வாரத்தில் தீா்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்தது. இதற்குப் பிறகாவது அரசியல் சாசன விதிகளின்படி ஆளுநா் நடந்து கொள்வாா் என நம்புகிறேன். தொடா்ந்து அவா் அரசியல் சாசனத்தை மீறிச் செயல்படுகிறாா்.
பெரியாா் என்பவா் தனி மனிதரல்லா். சமூக இழிவுகளைக் கடுமையாக எதிா்த்து, அதில் வெற்றியும் கண்டவா் பெரியாா். அவா் ஓா் இயக்கம். அந்த இயக்கத்தை யாரும் களங்கப்படுத்த வேண்டாம் என்றாா் அவா்.