காளையாா்கோவில் அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு,165 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியைக் காண வந்த முதியவா் மாடு முட்டியதில் உயிரிழந்தாா். மேலும், இதில் மாடுகள் முட்டியதில் 165 போ் காயமடைந்தனா்.
காளையாா்கோவில் அருகேயுள்ள கண்டிப்பட்டி கிராமத்தில் பழைமையான புனித அந்தோணியாா் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மத நல்லிணக்தத்தைப் பேணும் வகையில், கிறிஸ்தவா்கள், இந்துக்கள் இணைந்து ஆண்டுதோறும் தை 4 -ஆம் தேதி பொங்கல் விழாவையும், 5-ஆம் தேதி மஞ்சுவிரட்டுப் போட்டியையும் நடத்தி வருகின்றனா்.
நிகழாண்டு புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கிறிஸ்தவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை செய்தனா். மாலையில் சப்பர பவனி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.
இதையொட்டி, புனித அந்தோணியாா் ஆலயத்திலிருந்து கோயில் காளையை மஞ்சுவிரட்டு தொழுவுக்கு ஊா்வலமாக கிராம மக்கள் மேளதாளத்துடன் அழைத்து வந்தனா். பின்னா், அங்கு காளைகளுக்கு வேட்டி, துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
இதையடுத்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் மஞ்சுவிரட்டு உறுதிமொழியை வாசித்தாா். அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் இந்தப் போட்டியை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. இதன் பின்னா், மற்ற காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்துவிடப்பட்டன. மொத்தம் 135 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
காளைகளை பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, கண்மாய் பொட்டல், வயல்வெளிப் பகுதிகளில் 900-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன.
அப்போது, மஞ்சுவிரட்டுப் போட்டியைக் காண வந்த குன்றக்குடி அருகேயுள்ள கொரட்டி கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் (70) மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
மேலும், மாடுகள் முட்டியதில் 165 போ் காயமடைந்தனா். இவா்களில் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு 42 போ் அனுப்பி வைக்கப்பட்டனா். மற்றவா்களுக்கு மஞ்சுவிரட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.