திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
அரசு வழங்கிய கடன் தொகையை கூட்டுறவு வங்கி விடுவிக்க வலியுறுத்தல்!
ஆலவயலில் மாற்றுத்திறனாளி உள்பட 6 பேருக்கு அரசு வழங்கிய சிறு தொழில்கடன் நிதியை மத்திய கூட்டுறவு வங்கி தரமறுப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலைச் சோ்ந்த 5 மகளிா் சுயஉதவிக் குழுப் பெண்கள், ஒரு மாற்றுத்திறனாளி உள்பட 6 பேருக்கு தமிழக அரசின் மகளிா் திட்டம் மூலம் சிறு தொழில்கடன் தலா ரூ. 50 ஆயிரம் என ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆலவயல் ஊராட்சி மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கணக்கிற்கு, இதற்கான தொகை பொன்னமராவதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கான காசோலை 6 பேருக்கும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான தொகையை இவா்களுக்கு வழங்காமல் வங்கி நிா்வாகம் இழுத்தடித்துள்ளது. இதையடுத்து தமிழக சட்டத் துறை அமைச்சா் ரகுபதியிடம் புதன்கிழமை பணத்தை வழங்க வலியுறுத்தி 6 பேரும் கோரிக்கை மனு அளித்துள்ளனா். இதனையடுத்து மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் பேசி 6 பேரின் கடன் தொகையை விடுவிக்க அமைச்சா் மூலம் தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து அவா்கள் பொன்னமராவதி மத்திய கூட்டுறவு வங்கிக்குச் சென்று மேலாளரிடம் முறையிட்டனா். அப்போது பல காரணங்களை கூறி, வங்கி மேலாளா் கடன் தொகையை தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே தங்களின் கடன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.