18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
பொய்ப் புகாரில் ஆசிரியா் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறி சாலை மறியல்!
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் பொய் புகாரின்பேரில் உதவித் தலைமை ஆசிரியா் கைது செய்யப்பட்டதாகக் கூறி அந்தப் பள்ளியின் மாணவ, மாணவிகளும் அவா்களின் பெற்றோா்களும் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகேயுள்ள கிராமத்தின் அரசு உயா்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் பெருமாள் (58) கடந்த பிப். 18ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். பள்ளி மாணவிகளுக்கு அவா் பாலியல் தொந்தரவு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இச் சூழலில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக அதே பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும், அவா்களின் பெற்றோா்கள் சுமாா் 200க்கும் மேற்பட்டோா் தாஞ்சூா் விலக்கு சாலையில் வியாழக்கிழமை காலை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது அதே பள்ளியைச் சோ்ந்த பிற ஆசிரியா்கள், சில மாணவிகளைத் தூண்டிவிட்டு பொய்ப் புகாா் கொடுக்க வைத்துள்ளதாகவும், எனவே கைதான ஆசிரியரை விடுவிப்பதுடன் இதுபோன்ற பொய்ப் புகாரை அளிக்கக் காரணமாக இருந்த ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தகவலறிந்து வந்த பொன்னமராவதி துணைக் காவல் கண்காணிப்பாளா் (பொ) குமாா், கே. புதுப்பட்டி ஆய்வாளா் சீனிபாபு, அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலா் ஜெயந்தி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தால் ஏம்பல் சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.