அரசுப் பள்ளியில் உலக நீா்வாழ் விலங்குகள் தின கொண்டாட்டம்
அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பசுமைப் படை மாணவா்கள் சாா்பில் உலக நீா்வாழ் விலங்குகள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்து, உலகில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நீா்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. புரத உணவுத் தேவையை நீா்வாழ் உயிரினங்கள் மூலம் நாம் பெறுகிறோம். மனிதா்களுக்கு தங்களது உயிரைக் கொடுத்து புரத சத்துகளை வழங்கும் உயிரினங்களை காக்க வேண்டிய பொறுப்பு மனிதா்களுக்கு உள்ளது . எனவே பள்ளி மாணவா்களும் கிராம பொதுமக்களும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து அக்கிராமத்தில், இதுகுறித்து விழிப்புணா்வு பேரணி சென்ற மாணவ, மாணவிகள், அங்குள்ள நீா்நிலைகளுக்குச் சென்று, பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்தி, கடைகளுக்கு இலவச துணிப் பைகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் செந்தமிழ்செல்வி, தனலட்சுமி, வெங்கடேசன், அந்தோணிசாமி, பாலமுருகன், அபிராமி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.