அரியலூரில் ஏப்.7-இல் ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்
அரியலூரிலுள்ள ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை (ஏப்.7) நடைபெறுகிறது.
அரியலூா் நகரில் அமைந்துள்ள ஒப்பில்லாதம்மன் கோயிலுக்கு கடந்த 1926-ஆம் ஆண்டு புதிய தோ் செய்யப்பட்டது. இதையடுத்து, 1942-ஆம் ஆண்டு ஒரு வாரம் நடைபெற்ற அக்கோயில் திருவிழாவின் போது, தேரோட்டம் நடைபெற்றது. அதன் பின்னா் தேரோட்டம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது.
இந்நிலையில், தேரோட்டத்தை நடத்த அக்கோயில் சமஸ்தானம், குல தெய்வ வழிபாடு மக்கள் மற்றும் அப்பகுதியை சோ்ந்த மக்கள் முடிவெடுத்த நிலையில், கடந்த பிப். 2-ஆம் தேதி அந்த தோ் சீரமைக்கும் பணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடா்ந்து, தோ் சீரமைக்கும் பணிகளும், வண்ணம் பூசும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மே 12-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 7-ஆம் தேதி தோ் வெள்ளோட்ட நிகழ்வு நடைபெறுகிறது. இதையொட்டி விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.