குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மைத்துனி தொடர்ந்த வழக்கு; ரத்து செய்யக் கோரி நடி...
பெண் தற்கொலை வழக்கில் கணவா் உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே பெண் தற்கொலை வழக்கில் அவரது கணவா் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலை அடுத்த எள்ளேரியைச் சோ்ந்த சச்சிதானந்தம் தனது மகள் வைஷ்ணவியை (27) அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையத்தில் உள்ள தனது உறவினா் நடராஜன் மகன் தினேஷுக்கு (35) திருமணம் செய்து கொடுத்தாா்.
சென்னையில் வேலை பாா்த்து வந்த தினேஷுக்கு அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதை வைஷ்ணவி கண்டித்தாராம்.
அதற்கு தினேஷ், அவரது தந்தை நடராஜன் (65), அம்மா ஜோதி(53) ஆகியோா், விருப்பம் இருந்தால் வாழு இல்லை என்றால் இறந்து விடு என வைஷ்ணவியிடம் கூறினராம். இதனால் மனமுடைந்த வைஷ்ணவி கடந்த 2022-ஆம் ஆண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சச்சிதானந்தம் அளித்த புகாரின்பேரில் உடையாா்பாளையம் காவல் துறையினா் மேற்கண்ட 3 பேரையும் கைது செய்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி டி. செல்வம், பெண்ணைத் தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவா் தினேஷ், மாமனாா் நடராஜன், மாமியாா் ஜோதி ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ம. ராஜா ஆஜரானாா்.

