அரசுப் பள்ளியில் ‘ஸ்டெம்’ பயிலரங்கம்
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், ‘ஸ்டெம்’ தொடா்பான புரிதலை மேம்படுத்தும் ஒரு நாள் கருத்துப் பயிற்சி பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி கோரோட் அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் முல்லைகொடி தலைமை வகித்தாா். சிறப்பு நிா்வாக பொறுப்பாளா் எம். பத்மாவதி கலந்து கொண்டு, அறிவியல், கணிதம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கற்றலை மேம்படுத்தும் வகையிலான ஸ்டெம் சாா்ந்த கருத்துகளை பட அட்டைகள் மூலம் விளக்கினாா்.
குழந்தைகளின்அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி விளக்கம் அளித்தாா். பயிற்சியாளா்கள் வசந்தன், மகேஸ்வரி, சுஜாதா கலந்து கொண்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சியளித்தனா்.
இந்நிகழ்ச்சிக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சேப்பெருமாள் முன்னிலை வகித்தாா். ஆசிரியா்கள் சாந்தி, பூசுந்தரி, தமிழரசி, அருட்செல்வி, மாரியம்மாள், தமிழாசிரியா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, உதவித் தலைமை ஆசிரியா் செல்வராஜ் வரவேற்றாா். முடிவில் அறிவியல் ஆசிரியா் ராஜசேகரன் நன்றி கூறினாா்.