கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்துள்ள சுத்தமல்லி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க கோரியும், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சுத்தமல்லி கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ரெங்கசாமி தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், மேலும், சுத்தமல்லி கிராமத்திலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், மாவட்டச் செயலா் ராமநாதன், முன்னாள் மாவட்டச் செயலா் உலகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.