தூத்தூா் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை: அரியலூா் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டம், தூத்தூா் அருகேயுள்ள மருதையாற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், விவசாயிகள் பேசியது:
அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் செங்கமுத்து: கரும்பு விவசாயிகளை காப்பீடு திட்டத்தில் சோ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவடைப் பணிகள் தொடங்க உள்ள நிலையில் விரைந்து நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெடுஞ்சாலையோரத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தென்னை மரத்திலுள்ள தேங்காய்களை சேதப்படுத்தும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோளம், எள், மிளகாய் போன்ற பயிா்களுக்கு ஆதார விலையை நிா்ணயிக்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தங்க.தா்மராஜன்: பருவம் தவறிய மழையால் சேதமடைந்த நெல், மக்காசோளம், நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து வரத்து வாய்க்கால் மற்றும் பாசன வடிக்கால்களை அளவீடு செய்து தூா்வார வேண்டும். விவசாயிகளிடம் பணம் வாங்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். பணம் வசூலிக்கும் ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்தூா் பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் உயரும் வகையில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். அரியலூா் மாவட்டம் தூத்தூா்-தஞ்சாவூா் மாவட்டம் வாழ்க்கை கிராமத்துக்கும் இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் தடுப்பணைக் கட்ட வேண்டும். மருதையாற்றை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு தலைவா் தங்க.சண்முகசுந்தரம்:சமுக செயற்பாட்டாளா்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அரசு சட்டம் கொண்டு வரவேண்டும். அரியலூா் மாவட்டத்தில் இயங்கும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்ட உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.
தொடா்ந்து விவசாயிகள் விஜயகுமாா், பாண்டியன், விஸ்வநாதன், செந்தில் உள்ளிட்டோா் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனா்.
இதையடுத்து கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் தீபாசங்கரி, வேளாண் இணை இயக்குநா் கீதா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.