தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!
அரியலூரில் மாட்டுப் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்
அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், திருமானூா், தா.பழூா், செந்துறை,ஜெயங்கொண்டம், ஆண்டிடம், பொன்பரப்பி, மீன்சுருட்டி உள்ளிட்ட பல இடங்களில் மாட்டுப் பொங்கல் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து, உரிமையாளா்கள் கால்நடைகளை குளிப்பாட்டினா். பின்னா், மாடுகளின் கொம்புகளை சீவி, வண்ணங்கள் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிட்டு அழகு சோ்த்தனா். கழுத்துக்கு தோலிலான வாா் பட்டையில் சலங்கை கட்டி, திருநீறும், குங்குமப் பொட்டையும் பூசினா்.
மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும், உழவுக் கருவிகளை சுத்தம் செய்தும் மாட்டுப் பொங்கலுக்கு தயாராகினா்.
பின்னா், மாலையில் வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினா். பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அலங்காரப் பொருள்கள் விற்பனை: முன்னதாக, மாட்டுப் பொங்கலையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள கடைகளில், விவசாயிகள் அலங்காரப் பொருள்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.