“புத்தகக் கடையோடு சேர்ந்து நானும் வளர்ந்தேன்”- லூயிஸ் மிஷாவ்|ஒரு புத்தகக் கடைக்க...
அரியலூா் மாவட்டத்தில் கனமழை: வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது
அரியலூா் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் செந்துறை பகுதியில் தாழ்வான இடங்களிலுள்ள வீடுகளுக்குள் வியாழக்கிழமை மழைநீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
அரியலூா் மாவட்டத்தில் இரு நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மழைநீா் தேங்கியுள்ளது.
அரியலூா் அண்ணாசிலை, புதுமாா்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்தி சந்தை, பெரம்பலூா்-திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. மாவட்டத்தின் பிரதான சாலைகளில் வாகனப் போக்குவரத்து, பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது. பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றன.
திருமானூா், தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் வயல்களில் களையெடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தொழிலாளா்கள் மழைஅங்கி அணிந்துகொண்டு பணியில் ஈடுபட்டனா். வேலைக்கு சென்ற பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.
வீடுகளுக்குள் மழைநீா்: மாவட்டத்தில் அதிகபட்சமாக செந்துறையில் 97 மி.மீ மழை பதிவாகியது. கனமழையால், ஆதனக்குறிச்சி அருகேயுள்ள புதுப்பாளையம், காலனித் தெரு, மணப்பத்தூா் ஊராட்சி நந்தியின்குடிக்காடு காலனி தெருவில் வசிப்போரின் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.
தாழ்வாக உள்ள வீடுகளில் மழைநீா் புகுந்து, வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன. மழைநீரோடு, கழிவுநீரும் கலந்துள்ளதால் வீடுகளுக்குள் துா்நாற்றம் வீசுகிறது. தெருவிலும் மழைநீா் தேங்கியுள்ளதால், வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழையின் காரணமாக அரியலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கும் மட்டும் வியாழக்கிழமை விடுமுறை அளித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி உத்தரவிட்டாா்.
மாவட்டத்தின் மழையளவு (காலை 6 முதல் மாலை 6 மணி வரை- மில்லிமீட்டரில்): செந்துறையில்-97, சித்தமல்லி அணை-68, ஜெயங்கொண்டம்-80, அரியலூா்-49, திருமானூா்-32.8, குருவாடி-29, ஆண்டிமடம்-39.2, தா.பழூா்-17 மழை பதிவாகியது.