அறுவை சிகிச்சையால் படுக்கையில் ஆதீனம்; விசாரணைக்கு வந்த போலீஸ்; குவிந்த பாஜகவினர்; நடந்தது என்ன?
உளுந்தூர்பேட்டை கார் விபத்து தொடர்பாக உடல் நலமில்லாமல் படுக்கையில் இருந்த மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த மே மாதம் 2 ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த விழாவில் கலந்து கொள்ள மதுரை ஆதீனம் காரில் சென்றபோது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் தன் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும், குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள் தன்னைக் கொலை செய்ய முயன்றதாகவும் மதுரை ஆதீனம் புகார் தெரிவித்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே இந்தச் சம்பவம் பற்றி விசாரித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர், சம்பவம் நடந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் கூறுவதாக அறிக்கை வெளியிட்டனர்.
இந்த நிலையில் வாகன விபத்து குறித்து தவறான தகவல்களைப் பரப்பி மத மோதலைத் தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை எழுப்பூர் அருகே உள்ள அயனாவரத்தை வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் அளித்து புகாரின் கீழ் சென்னை கிழக்கு மண்டலம் சைஃபர் கிரைம் காவல்துறையினர் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து முன்ஜாமின் கோரி மதுரை ஆதினம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார்.
'மதுரை ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேல் ஆனதால் நேரில் ஆஜராகக் கட்டாயம் இல்லை, காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்து கொள்ளலாம், காவல்துறையின் விசாரணைக்கு ஆதீனம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்துவதற்கு சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி தலைமையில் மதுரை தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள ஆதீன மடத்திற்கு நேரில் வருகை தந்தனர்.
மதுரை ஆதினம், ஹெர்னியா ( குடல் இறக்க) அறுவை சிகிச்சை முடிவடைந்து படுக்கையில் இருந்து வரும் நிலையில் சைஃபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
'தன்னால் எழுந்திருக்க முடியாது, வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்துக் கொடுக்க உதவியாகவும் தன் தரப்பு கருத்தைச் சொல்வதற்கும் மடத்திலுள்ளவரை உதவிக்கு வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என்ற மதுரை ஆதீனத்தின் கோரிக்கையை காவல்துறையினர் நிராகரித்தனர்.
மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன், பாஜக வழக்கறிஞர்கள், மதுரை மாநகர பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆகியோர் ஆதீன மடத்துக்கு வருகை தந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதீனத்திடம் விசாரணை நடத்துவதைக் கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் மதுரை ஆதீனத்திடம் சைஃபர் கிரைம் போலீசார் நடத்திய ஒரு மணி நேர விசாரணையில் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலைப் பெற்றுக் கிளம்பிச் சென்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன், "மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் காவல்துறையினர் தனியாக விசாரணை நடத்தினர். வழக்கறிஞர்கள் உள்ளிட்ட யாரையும் அனுமதிக்கவில்லை, மதுரை ஆதீனம் மூன்று தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது உதவிக்காக ஒருவர் இருக்க வேண்டும் எனக் கேட்ட நிலையில், அதனை காவல்துறையினர் ஏற்க மறுத்தனர். இந்நிலையில் மதுரை ஆதீனம் காவல்துறையினரின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்தார்" என்றார்.