தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
'ஊர் திருவிழாவில் மின்சாரத் திருட்டு'- ரூ.18,000 அபராதம் விதித்த மின்வாரிய அதிகாரிகள்; நடந்தது என்ன?
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சிவாயம் ஊராட்சியில் இருக்கும் அலங்காரிபட்டியில் பட்டவன் திருவிழா நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. இறுதி விழாவான இன்று மாடு மாலை தாண்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 மந்தைகளில் இருந்து மாடுகளுடன் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்த விழாவிற்கு தோகைமலை வடக்கு மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் அனுமதி பெறாமல் விழா குழுவினர் உயர் அழுத்த மின் கம்பத்திலிருந்து மின்சாரத்தை திருடி திருவிழா நடைப்பெற்ற 4 நாட்களாக விழா கொண்டாடியதாக உயர் அதிகாரிகளுக்கு சென்ற புகாரை அடுத்து, குளித்தலையில் உள்ள மின்வாரிய மண்டல செயற்பொறியாளர் சரவணன் உத்தரவின் பேரில் தோகைமலை வடக்கு உதவி பொறியாளர் தேவராஜன் விழா நடக்கும் பகுதிக்கு வருவதாக தெரிந்ததும், அதிகாரிகள் வருவதை அறிந்த விழா குழுவினர் உயர் அழுத்த மண் கம்பத்திலிருந்து மின்சாரம் திருடிய வயரை துண்டித்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த உதவி பொறியாளர் தேவராஜன், விழா குழுவினரிடம் விசாரணை நடத்தினார். அவரின் விசாரணையில் மின்சாரம் திருடப்பட்டது உறுதியானது. அதைத்தொடர்ந்து விழா நடக்கும் பகுதியில் எத்தனை ஸ்பீக்கர் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது, எத்தனை டியூப் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, அலங்கார விளக்குகள் எத்தனை உள்ளிட்ட அனைத்தையும் கணக்கீடு செய்தார். அதைத்தொடர்ந்து, விழாவிற்காக எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்பதை கணக்கீடு செய்து ரூ. 18,000 அபராதம் விதித்தார். கோயில் திருவிழாவுக்கு உயர்மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.