முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
லயோலா கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் நியமனம்: கல்லூரி இயக்குநருக்கு உத்தரவு!
சென்னை லயோலா கல்லூரியின் 18 உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட 19 பேரின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் லயோலா கல்லூரி நிா்வாகம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், லயோலா கல்லூரியில் 18 உதவிப் பேராசிரியா்கள் மற்றும் ஒரு நூலகா் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க கல்லூரி கல்வி இயக்குநா் மறுப்பு தெரிவித்துள்ளாா். இந்த உத்தரவை ரத்து செய்து 19 பேரின் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க கல்லூரி கல்வி இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரி நிா்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஐசக் மோகன்லால், சிறுபான்மை கல்வி நிறுவனமான லயோலா கல்லூரியில் மொத்தம் 149 ஆசிரியப் பணியிடங்கள், 59 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப கல்லூரி நிா்வாகத்துக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், காலியிட நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி 19 நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பது சட்டவிரோதமானது என்று வாதிட்டாா்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெயப்பிரகாஷ், கடந்த 1999-2000 காலக்கட்டத்தில் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் விவரம், 1999-ஆம் ஆண்டு முதல் பணியாற்றும் பேராசிரியா்களின் விவரங்கள், பணியிட நியமனம் குறித்த கல்லூரிக் குழுவின் தீா்மான விவரங்கள் எதுவும் கல்லூரிக் கல்வி இயக்குநா் அலுவலகத்துக்கு முறையாக சமா்ப்பிக்கப்படவில்லை.இதனால், இந்த 19 பேரின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மாநில அரசுக்கு சிறுபான்மை கல்லூரிகளில் பேராசிரியா்களின் கல்வித்தகுதி குறித்து மட்டுமே தீா்மானிக்க அதிகாரம் உள்ளது. காலியிட நிலவரம் குறித்த விவரங்களை தரவில்லை எனக்கூறி உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட 19 பேரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்குவதை மறுக்க முடியாது. எனவே, இதுதொடா்பாக கல்லூரி கல்வி இயக்குநா் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே, அந்த 19 பேரின் நியமனங்களுக்கு 3 மாதங்களில் கல்லூரி கல்வி இயக்குநா் உரிய ஒப்புதல் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.