``அதிமுக -பாஜக கூட்டணியில் விஜய், சீமான் இணையலாம்; ஆனால்..'' - பாஜக ராம சீனிவாசன் சொல்வதென்ன?
திண்டுக்கல், நத்தம் சாலையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, "திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியில் இரு தரப்பினரிடையே கடந்த 22 ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. இன்றைய பிரச்னையில் வழக்கு பதிவு செய்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை. ஆத்தூர் அமைச்சர் ஐ.பெரியசாமி இரு தரப்பினரையும் அழைத்து பேசியிருக்கலாம். ஆனால் இதுவரை செய்யாதது ஏன்? விரைவில் இதற்கு சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும்.
அதிமுக - பாஜக கூட்டணி
அதிமுக - பாஜக கூட்டணியை சிலர் எதிர்பார்க்கவில்லை. இந்த கூட்டணி அமைவதற்கு முன் 200 தொகுதிகளில் திமுக வெற்றிப் பெறும் என முழக்கமிட்டனர். தற்போது அதனை தவிர்த்து விட்டனர். இதனால், அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட வேண்டும் என திமுக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமியும் தலைவர்களாக உள்ளனர். கூட்டணி ஆட்சியா, தனித்து ஆட்சியா, வெளியில் இருந்து ஆதரவா என்பதையெல்லாம், தேர்தலுக்கு பின் விவாதிக்க வேண்டும். தற்போது பேச வேண்டியதில்லை. அவர்கள் இருவர் சொல்வதை இரு கட்சியினரும் ஏற்றுக் கொள்வோம்.
`நாங்கள் ஏமாளிகள் அல்ல' என எடப்பாடி பழனிச்சாமி . அவர்களின் தொண்டர்களுக்காக கூறியுள்ளார். அதிமுக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. திமுகவிற்கு எதிராக ஓட்டு சிதற கூடாது என்பதற்காக திமுகவிற்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளையும் கூட்டணிக்கு அழைக்கிறோம்.

விஜய், சீமான் ஆகியோரை வரவேற்கிறோம்..
அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சியான த.வெ.க கூட இணையலாம். ஆனால், விஜய், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வாரா? என்று தெரியவில்லை. நடிகர் விஜய், சீமான் ஆகியோரை இந்த கூட்டணிக்கு வரவேற்கிறோம்.
திமுக வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு செயல்பட வேண்டும். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாகிவிட்டனர். அதிமுக திசை மாறிச் செல்கிறது என முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் முடிவு எங்கிருந்தோ எடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் அதிமுக - பாஜக இருவரும் இணைந்து ஓட்டு வாங்கிய போது எங்கே சென்றார். அவருக்கு எங்கிருந்து உத்தரவு வந்ததோ தெரியவில்லை. அதனை அவர் செயல்படுத்துகிறார்" என தெரிவித்தார்.