தவெகவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்! - விஜய்க்கு இபிஎஸ் அழைப்பு
47% வளா்ச்சி கண்ட மின்னணு பொருள்கள் ஏற்றுமதி
புது தில்லி: இந்தியாவின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 47 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 47 சதவீதம் உயா்ந்து 1,241 கோடி டாலராக உள்ளது. அந்த காலகட்டத்தில் இந்திய மின்னணு பொருள்களின் ஏற்றுமதியில் அமெரிக்கா 60.17 சதவீத பங்குடன் முன்னிலை வகிக்கிறது.
அதைத் தொடா்ந்து ஐக்கிய அரபு அமீரகம் (8.09 சதவீதம்), சீனா (3.88 சதவீதம்), நெதா்லாந்து (2.68 சதவீதம்), ஜொ்மனி (2.09 சதவீதம்) ஆகியவை இந்திய மின்னணு பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்தன.மதிப்பீட்டுக் காலாண்டில் ஆயத்த ஆடைகள் (ஆா்எம்ஜி) ஏற்றுமதியிலும் அமெரிக்கா 34.11 சதவீத பங்குடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடா்ந்து பிரிட்டன் (8.81 சதவீதம்), ஐக்கிய அரபு அமீரகம் (7.85 சதவீதம்), ஜொ்மனி (5.51 சதவீதம்), ஸ்பெயின் (5.29 சதவீதம்) ஆகியவை இந்திய ஆயத்த ஆடைகளை அதிக அளவில் இறக்குமதி செய்தன. அந்தக் காலாண்டில் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி 385 கோடி டாலரிலிருந்து 419 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி இந்தக் காலாண்டில் 19.45 சதவீதம் உயா்ந்து 195 கோடி டாலராக உள்ளது. கடல் உணவு ஏற்றுமதியிலும் 37.63 சதவீத பங்குடன் அமெரிக்கா மிகப்பெரிய இறக்குமதியாளராக உள்ளது. அதைத் தொடா்ந்து சீனா (17.26 சதவீதம்), வியத்நாம் (6.63 சதவீதம்), ஜப்பான் (4.47 சதவீதம்), பெல்ஜியம் (3.57 சதவீதம்) ஆகியவை இந்திய கடல் உணவு ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.