குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்துக்கு... புதிய அறிவிப்பு!
Nightshade Foods: அதென்ன நைட்ஷேடு உணவுகள்; அது ஏன் பலருக்கும் பிடிக்கிறது?
பல குழந்தைகளுக்கு தக்காளி சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் உயிர். இதனால் வரக்கூடிய பிரச்னைகளை உணராமல், நம்மில் பலர் செய்வது சுலபம் என இதை அடிக்கடி சமைத்துக்கொண்டிருப்போம்.
உருளை வேண்டுமானால் வாயுத்தொல்லை கொடுக்கும், தக்காளி சாதத்திற்கு என்ன குறை என்று கேட்கிறீர்களா? ‘நைட்ஷேடு ஃபுட்ஸ்’ (Nightshade Foods) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரவில் மலரும் தாவர வகைகள் (Nightshade Plants) கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளும் நைட்ஷேடு ஃபுட்ஸ் தான். இவற்றால் என்ன பிரச்னை வரலாம்; எவையெல்லாம் நைட்ஷேடு தாவரங்கள் என விவரிக்கிறார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.

தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, புகையிலை, மிளகாய் மற்றும் மிளகு நைட்ஷேடு தாவர வகையின் கீழ் வருவன. இவற்றை சோலநேஸி இனம் என்றும் அழைப்பார்கள். 'தினமும் சாப்பிடும் காய்கறிகளையே ஆபத்து என்றால் எப்படி' என எண்ணும்முன் இவற்றின் பாதிப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
பெரும்பாலானோரை இந்த நைட்ஷேடு உணவுகள் ஒன்றும் செய்வதில்லை. ஆனால், ஒரு சிலருக்கு இது பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. அதுவும் மூட்டு வலி, வயிறு எரிச்சல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இந்த உணவுகள் பாதிப்புகளை அதிகரிக்கும். இவற்றில் காரகங்கள் (ஆல்கலாய்டு) அதிகமாக இருப்பதால் மூட்டுகள் மற்றும் தசை இயக்கம் பாதிக்கப்படலாம்.

தீங்கு விளைவிக்கும் மற்றொரு பொருளான கால்சிட்ரால் (Calcitriol) என்னும் ஹார்மோன், நமது உடலைக் கால்சியம் அதிகமாக உறிஞ்சிக்கொள்ளக் கட்டளை பிறப்பிக்கிறது. இதனால், திசுக்களில் கால்சியம் தங்கிவிடுவதால் தோள் மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படும். எலும்புகளில் கால்சியம் குறைபாடு ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவேதான் மருத்துவர்கள், ஆர்த்ரைட்டிஸ் மற்றும் கை, கால் பிரச்னைகளோடு வருபவர்களுக்கு நைட்ஷேடு உணவுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்கள்.
தவிர, இவ்வகைத் தாவரங்களில் லெக்டின் (Lectin) என்னும் இயற்கை பூச்சிக்கொல்லி இருக்கிறது. இது வயிற்றுப் பிரச்னைகள், உணவு சகிப்புத்தன்மை மற்றும் வாதம்போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இவற்றில் கலந்திருக்கும் நிகோடின்போன்ற நச்சுப் பொருள்களும் ஆபத்தைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன.

ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்த நைட்ஷேடு உணவுகள் சில நன்மைகளையும் செய்கின்றன. ஆற்றல் திறனை அதிகப்படுத்தி, பதற்றத்தை வெகுவாகக் குறைக்கின்றன. இதனால் ஒருவித அமைதியும் தூண்டுதலும் கிடைப்பதால் மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. இதனாலேயே நாம் பீட்சா, சிப்ஸ் போன்றவற்றை விரும்பி உண்கிறோம். தக்காளி சூப் மற்றும் கெட்ச்அப் போன்றவற்றைத் தேடிச்செல்கிறோம். எனவே, இவ்வகைத் தாவரங்களால் உங்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படாவிட்டாலும், குறைவாக உட்கொள்வது நன்மை பயக்கும்.
மூட்டு வலி மற்றும் எலும்பு பாதிப்பு உள்ளவர்கள் குறைந்தது மூன்று மாதங்கள் நைட்ஷேடு தாவர உணவுகளைப் பயன்படுத்தாமல் இருந்து பாருங்கள். உடலில் முன்னேற்றம் ஏற்படும். பிறகு, வாரத்திற்கு ஒருமுறை, ஒரு காய் என்று சேர்த்துக்கொண்டு பரிசோதனை செய்து பாருங்கள். உதாரணமாக, முதல் வாரம் உருளை மட்டும் சேருங்கள். வலி, மூட்டு விறைப்பு, சுவாசப்பிரச்னைகள், ஆற்றல் இல்லாமை, ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி என்று ஏதேனும் உபாதைகள் வருகின்றனவா என்று பாருங்கள். உருளையால் எதுவும் ஏற்படவில்லை என்னும்போது, அடுத்த வாரம் தக்காளியைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற பரிசோதனைகளின்போதுதான் எந்தத் தாவரத்தால் உபாதைகள் வருகின்றன என்பதைச் சுலபமாகக் கண்டறிய முடியும். பிறகு, அவற்றை முழுமையாகத் தவிர்த்து விடுங்கள்'' என்கிறார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.