ஜூலை 24-ல் அறிமுகமாகிறது ரியல் மீ 15 ப்ரோ! சிறப்பம்சங்கள் என்னென்ன?
`அதிமுக தலைமைக்கு எதிராக காய் நகர்த்தும் விஜய்!’ - பின்னணி என்ன?
'தவெக பொதுக்கூட்டம்!'
சேலத்தில் விஜய்யின் தவெகவின் முதல் மாநில கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம்போல, 'அவர் முகத்தை பாருய்யா..சிரிப்பப் பாருய்யா...' என விஜய்யின் துதிபாடும் கூட்டமாக மட்டும் இல்லாமல், 2026 தேர்தலை முன்வைத்து நிறைய அரசியல் மெசேஜ்களையும் கடத்தக் கூடிய கூட்டமாகவே இந்தப் பொதுக்கூட்டம் அமைந்திருந்தது.

தவெகவின் நகர்வுகளை சமீபத்தில் நடந்த செயற்குழுவுக்கு முன், பின் என இரண்டாகப் பிரிக்கலாம். செயற்குழுவுக்கு முன்பு வரைக்கும் தவெக முகாமிலேயே ஒரு குழப்பமான சூழல்தான் நிலவி வந்தது. NDA கூட்டணியிலிருந்து விஜய்க்கு வெளிப்படையாக அழைப்பு மேல் அழைப்பாக கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
'விஜய்தான் முதல்வர் வேட்பாளர்!'
பாஜகவுடன் செல்ல தவெக முகாமுக்கு ஆரம்பத்திலிருந்தே விருப்பமில்லை. விஜய்யை 'ஜோசப் விஜய்' என பாஜக அடையாளப்படுத்தியதில் இருந்துதான் அவரின் அரசியல் நகர்வுகள் வேகம் பிடித்தது. அதனால் அதே பாஜகவோடு கூட்டணி செல்வது அரசியல்ரீதியாக பெரிய சறுக்கலைக் கொடுக்கும் என்பதுதான் பனையூர் தரப்பின் எண்ணமாக இருந்தது. ஆனால், அதிமுக மீது அப்படி ஒரு பார்வை இல்லை.

பாஜகவை விட்டுவிட்டு அதிமுக வந்தால் அவர்களோடு கூட்டணி செல்லலாம் என்கிற திட்டம்தான் தலைமைக்கு நெருக்கமான ஒரு சிலருக்கு இருந்திருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரசாரத்துக்கே பாஜக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களுடன் நெருக்கம் காட்டினார். அதனால் தங்களுடைய அதிமுக கணக்கு பலிக்காது என்பதை உணர்ந்துதான் செயற்குழுவில் மிகத் தெளிவாக விஜய்தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில்தான் கூட்டணி என தீர்மானமும் நிறைவேற்றினார்.
'Focus - விஜய்!'
இனிமேல் விஜய்யை மட்டுமே மையப்படுத்தி, அவரை மட்டுமே கதாநாயகனாக முன்னிறுத்திதான் 2026 தேர்தலை சந்திக்க வேண்டும் என்கிற முடிவுக்கு தவெகவின் வியூக வகுப்பு அணி வந்து சேர்ந்தது. விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி பிரசார திட்டங்களையும் வகுக்கத் தொடங்கினர்.

சேலத்தில் நேற்று நடந்த மாநில கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தலைமையிடமிருந்து மா.செக்களுக்கு ஒரு உத்தரவு பறந்தது. அதாவது, 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்!' என்ற வாசகத்தை அத்தனை பேனர்களிலும் போஸ்டர்களிலும் பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தினர். சேலத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறதென தலைமையிடமிருந்து வந்த அறிக்கையிலும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றே குறிப்பிட்டிருப்பார்கள்.
நேற்றைய சேலம் பொதுக்கூட்டமும் விஜய் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி நடத்தப்பட்ட முதல் கூட்டம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். பொதுக்கூட்டத்துக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களிலும் தலைமை சொன்ன வாக்கியத்தை நிர்வாகிகள் தவறாமல் பயன்படுத்தியிருந்தனர். மேடையில் பேசிய பலரும் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்பதை அழுத்தம் திருத்தமாக பயன்படுத்தியிருந்தனர்.

பாஜக அனுப்பிவிட்ட ஆள் என விமர்சிக்கப்படும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அருண்ராஜை 'கொள்கை எதிரி பாஜக' என்ற தலைப்பில் பேச வைத்து அந்த கறையை துடைக்க முயன்றிருந்தனர். அவரும் பாஜகவோடு ஆர்.எஸ்.எஸ் யையும் குறிப்பிட்டு அட்டாக் செய்தார். செயற்குழுவில் விஜய்யே ஆர்.எஸ்.எஸ் யையும் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். பாஜக எதிர்ப்பை கூர்மைப்படுத்துவதன் மூலம் சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதே திட்டம். அதேமாதிரி, கேத்தரின் என்கிற பெண் நிர்வாகியை வைத்து திமுக அரசின் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை விமர்சித்திருந்தனர்.
'1000 ரூபாய் கொடுத்துட்டு எல்லா பக்கமும் டாஸ்மாக்கையும் திறந்து வச்சிருக்கீங்களே...' என கேத்தரின் பேசியிருந்தார். மகளிரின் வாக்குகளை குறிவைத்து திமுக கொண்டு வந்த திட்டங்களை கட்சியின் ஆண் நிர்வாகிகள் எதிர்த்து பேசுவதை விட பெண் நிர்வாகிகளே அதை விமர்சித்து பேசுவது இன்னும் எடுபடும் என நம்புகின்றனர். இதைத் தொடர்ச்சியாகவே செய்கின்றனர்.

தவெக மேடையில் திமுக - பாஜக அட்டாக் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், நேற்று அதிமுகவையும் வெளிப்படையாக அட்டாக் செய்திருந்தார்கள். அதுதான் விழாவின் ஹைலைட்டே. செயற்குழுவுக்கு முன்பு வரைக்கும் எதிர்க்கட்சியை ஏன் விமர்சிக்க வேண்டும் என நழுவிக்கொண்டேதான் இருந்தனர். இப்போது விஜய்யை மையப்படுத்தி மட்டும்தான் தேர்தலை சந்திக்கப் போகிறோம் என வியூக குழு முடிவெடுத்துவிட்டதால், அதிமுக - தவெக கூட்டணி என்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேவை உண்டாகியிருக்கிறது. அதனால்தான் முதல் முறையாக அதிமுகவை அட்டாக் செய்திருந்தனர்.
'அதிமுக அட்டாக்!'
மைக்கைப் பிடித்த ஆதவ் அதிமுகவை கொஞ்சம் கூடுதல் டோஸ் ஏற்றி புரட்டி எடுத்துவிட்டார். 'அதிமுக-வுக்கு வலுவான தலைமை இல்லை. அந்தக் கூட்டணிக்கு யார் தலைமை என்றே தெரியவில்லை. சி.எம் யார் என்றால் அமித் ஷாதான் சொல்வார் என்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் குறிக்கோளின் நம்பிக்கைதான் தவெக தலைவர் விஜய். அதிமுக தொண்டர்கள் ஏற்கனவே எங்கள் பக்கம் வந்துவிட்டனர்.' என ஒரே போடாக போட்டார்.

கருணாநிதியை விமர்சித்து பேசிய அதே மேடையில் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் ஏகத்துக்கும் புகழ்ந்தார்கள். இதுவுமே வழக்கமான ஒன்றுதான். 'மூன்று எழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது...' என விஜய்யை இன்னொரு எம்.ஜி.ஆர் ஆக முன் நிறுத்திதான் கட்சியின் கொள்கைப் பாடலையே வடிவமைத்திருந்தனர்.
அதேமாதிரி, ஒவ்வொரு கூட்டத்திலும் 1977 இல் எம்.ஜி.ஆர் செய்த புரட்சியை 2026 இல் விஜய் செய்வார் என்றுதான் அவரை ப்ரமோட் செய்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுகவின் 'தீயசக்தி திமுக' பாணியில் தீவிர திமுக எதிர்ப்பையும், அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகம் கொடுக்காத பாஜக கூட்டணியை விமர்சிப்பதன் மூலம் அதிமுக தொண்டர்களை தங்கள் பக்கமாக இழுக்கலாம் என நினைக்கின்றனர். அந்தத் திட்டத்தை ஆதவே நேற்று வெளிப்படையாக மேடையில் போட்டுடைத்தார்.
`விஜய்தான் முதல்வர் வேட்பாளர்!' அவரின் முகத்தை வைத்துதான் தவெக தேர்தலை எதிர்கொள்ளப்போகிறது என்பதை அறுதியிட்டு கூறும் வகையில்தான் மதுரை மாநாடு இருக்கப்போகிறது என்கின்றனர் விவரமறிந்தவர்கள். ஸ்டாலின் vs விஜய் என்கிற நேரெதிர் போட்டியையும் Perception யையும் உருவாக்கும் வகையில் அடுத்தடுத்த பிரசாரத் திட்டங்கள் அமையும் என்றும் கூறுகின்றனர்.

'பவர் சென்டர்!'
நேற்றைய கூட்டத்தில் கட்சிக்குள் பவர் சென்டர் யார் என்பதையும் பூடகமாக உணர்த்தியதையும் பார்க்க முடிந்தது. மேடையில் மைக் பிடித்த அத்தனை நிர்வாகிகளும் பொதுச்செயலாளர் ஆனந்த் பெயரை மட்டுமே குறிப்பிட்டு வரவேற்றார்கள். ஆனந்த அண்ணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளே...என கடந்து சென்றுவிட்டார்கள். மேடையிலிருந்த ஆதவ், முன்னாள் ஐ.ஆர்.எஸ், விஜய்க்கு நெருக்கமான பொருளாளர் வெங்கட்ராமன் என யாருடைய பெயரையும் நிர்வாகிகள் தப்பித் தவறிக்கூட சொல்லிவிடவில்லை.
7-8 நிர்வாகிகள் மைக் பிடித்திருந்தார்கள். எல்லாருமே இதில் ரொம்பவே கவனமாக இருந்தார்கள். எத்தனை பேர் வந்தாலும் இங்கே நான்தான் என்கிற பவர் பாலிட்டிக்ஸையும் ஆனந்த் சைலண்ட்டாக செய்திருந்தார். அதேமாதிரி, முக்கிய நிர்வாகிகளை தவிர யாரையும் 5 நிமிடத்திற்கு மேல் பேச அனுமதிக்கவில்லை. திமுகவிலிருந்து சமீபத்தில் பனையூர் பக்கம் தாவிய முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின் முதல் முறையாக மேடையேறியிருந்தார். அவருக்கும் 5 நிமிடம்தான். 'நேரம் ஆகிவிட்டது...' என்கிற துண்டுச் சீட்டை காண்பித்து அனுப்பிவிட்டார்கள்.
முக்கிய நிர்வாகிகள் பேசுவது மட்டும்தான் ஹைலைட்டாக இருக்க வேண்டும் என நிகழ்வுக்கு முன்பே திட்டமிட்டிருந்தனர். கடைசியில் மழை வந்து எல்லா பழியையும் தன் மீது வாங்கிக் கொண்டது. விஜய்தான் முதல்வர் வேட்பாளர், அதிமுக தலைமையை எதிர்ப்போம் - தொண்டர்கள் எங்கள் நண்பர்கள் என்கிற மெசேஜை முன்வைப்பதற்கான கூட்டமாகத்தான் இது அமைந்தது.

விஜய் தரப்பு அதிமுக தலைமைக்கு எதிராக வாள் வீச தொடங்கியிருக்கும் நிலையில், இன்றைக்கு ஆங்கில நாளிதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில் கூட 'திமுகவை வீழ்த்த ஒத்தக் கருத்துடைய சக்திகள் ஒன்றிணைவது அவசியம்.' என எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
விஜய் தனது சிப்பாய்கள் மூலம் சில முக்கிய நகர்வுகளை செய்திருக்கிறார். இதற்கு அதிமுகவின் ரியாக்சன் என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம்.!