சாத்தான் குளம் தந்தை - மகன் வழக்கு: உண்மையைக் கூறுவதாக கைதான காவலர் மனு!
`உன்னைக் கொன்று பொட்டலமாக அனுப்பி வைப்போம்’ - மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட மனைவி; எஸ்.ஐ மகன் கைது
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மேல்நெல்லி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் நர்கீஸ். பி.எஸ்.சி பட்டதாரியான நர்கீஸிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவுக்குஉட்பட்ட சோழவரம் கிராமத்தைச் சேர்ந்தவரும், பிரம்மதேசம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டருமான பாபாவின் மகன் காஜா ரஃபிக் என்பவருக்கும் கடந்த 8-6-2023 அன்று திருமணம் நடைபெற்றது.
கணவர் காஜா ரஃபிக் மரைன் இன்ஜினீயரிங் படித்துள்ளதாலும், மாமனார் எஸ்.ஐ என்பதாலும் மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளதாகக் கருதிய நர்கீஸின் பெற்றோர் தங்களின் வருமானத்துக்கு அப்பாற்பட்டு கடன் வாங்கி, திருமண செலவுகளைச் செய்திருக்கின்றனர். திருமணத்தின்போது, 30 பவுன் நகைகள், மாப்பிள்ளைக்குப் புதிய பைக் வாங்குவதற்காக ரூ.1.50 லட்சம் ரொக்கம், 500 கிராமில் வெள்ளிப்பொருள்கள், ரூ.3 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருள்கள், ரூ.6 லட்சம் திருமண செலவு என ஆடம்பரமாக திருமணத்தை நடத்தியிருக்கின்றனர் நர்கீஸின் பெற்றோர்.
திருமணம் முடிந்த மகிழ்ச்சியோடு, கணவன் வீட்டுக்குச் சென்ற நர்கீஸை படாதபாடு படுத்தியிருக்கின்றனர். மாமியார் இறந்துவிட்ட நிலையில், சப்-இன்ஸ்பெக்டரான அவரின் மாமனாரும் ஷகிலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். மாமனாரின் இந்த மனைவிக்கும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், நர்கீஸ் தனக்குப் போட்டியாக வந்துவிட்டதாகக் கோபப்பட்ட மாமியார் ஷகிலா, `சொத்துகள் தன்னுடைய மகள்களுக்கு வராமல், முதல் தாரத்து மகனின் மனைவியான நர்கீஸுக்கு சென்றுவிடுமோ..?’ என்று கருதி, உள்நோக்கத்துடன் மருமகள் நர்கீஸை கொடுமைப்படுத்த ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

`வீட்டு வேலைகளைச் செய்வதில்லை’ எனப் பொய்யான தகவலையும் கூறி, கணவர், மாமனாரிடமும் நர்கீஸ் மீது வெறுப்பை உண்டாக்கியிருக்கிறார் மாமியார் ஷகிலா. `நர்கீஸ் எப்போது வீட்டில் காலடி எடுத்து வைத்தாலோ, அப்போதிலிருந்து குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. அவள் ராசி இல்லாதவள்’ எனத் திட்டித்தீர்த்து குடும்பமே வெறுப்பைக் கக்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னைக் காரணமாக, வேலூர் சதுப்பேரி, முல்லை நகரிலிருக்கும் கே.ஹெச் பின்புறம் கணவன் காஜா ரஃபிக் உடன் நர்கீஸை தனிக்குடித்தனம் வைத்தனர். அதன்பிறகும், கூடுதல் வரதட்சணைக் கேட்டு நர்கீஸை கணவன் குடும்பத்தினர் கடுமையாக துன்புறுத்திவந்திருக்கின்றனர். இந்த நிலையில்தான் கடந்த 3-6-2025 அன்று இரவு சுமார் 10.30 மணியளவில், மொட்டை மாடியில் இருந்து நர்கீஸை கீழே தள்ளிவிட்டு கொலைச் செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. மாடியில் இருந்து விழுந்ததில், நர்கீஸிக்கு இடுப்பு மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டிருக்கிறது. படுத்தப் படுக்கையாகிவிட்டார் இளம்பெண் நர்கீஸ்.
ஸ்ட்ரெச்சரில் ஆம்புலன்ஸ் மூலமாக...
இதைத்தொடர்ந்து, ஜூலை 21-ம் தேதியான நேற்றைய தினம் ஸ்ட்ரெச்சரில் ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த நர்கீஸ், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியைச் சந்தித்து, இதுசம்பந்தமாகப் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், ``மாமனார், மாமியாருடன் என் கணவர் சேர்ந்துக்கொண்டு வீட்டில் வேலைக்காரியைப்போல என்னை நடத்தினார். எனக்கு சரியான சாப்பாடு வழங்கவில்லை. வாஷிங்மெஷின் இருந்தும் மொத்த துணிகளையும் கையால் துவைக்க வைத்தனர். என் செருப்பைக் கூட மறைத்து வைத்து, வெறும் காலால் என்னை வெயிலில் வேலை வாங்கினர். என்னை தூங்கக் கூட அனுமதிக்கவில்லை. என் கணவர் வெளியில் சென்று வீட்டுக்குத் திரும்பும்போது, அவருக்கு ஏதேனும் வேலை ஆகவில்லை என்றாலும், அந்தக் கோபத்தை என்மீது காண்பித்து இரவில் என்னை எட்டி உதைப்பார்.
என் மாமனாரும், என் மாமியாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு குடிபோதையில் வந்து என்னை இழிவுப்படுத்தி பேசுவார். என் கணவருடன் என்னை பேசவே அனுமதிக்க மாட்டார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், மருத்துவம் பார்க்காமல், அந்த சமயத்திலும் என்னை வீட்டு வேலைச் செய்ய சொல்லி, அடிமையைப்போல நடத்தி வந்தனர்.

என் மாமியார் என்னிடம் `உன்னை இங்கு வாழ விடமாட்டேன். உன்னைக் கொன்று பொட்டலமாக உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்’ என்று மிரட்டுகிறார். வீட்டு வேலை முடித்து இரவில் தூங்கும்போதும் மாமனாரும், மாமியாரும் என் அறைக் கதவை வேகமாகத் தட்டி என்னை பயமுறுத்தி எழுப்புவார்கள். என் கணவர் இரவு முழுவதும் என்னை அடித்து துன்புறுத்துவார். அன்பாகவே பேச மாட்டார்.
இந்த நிலையில்தான் என் கணவன் வேலை சம்பந்தமாக அந்தமான் செல்வதாகக் கூறி என்னுடைய பெற்றோர் வீட்டிலேயே என்னை இருக்கச் செய்தனர். இவ்வளவும் திருமணமான மூன்றே மாதங்களில் நடந்தவை. மாமனாரும், மாமியாரும் என்னை வீட்டில் சேர்க்காததால், கடந்த 2023 செப்டம்பர் முதல் 2024 அக்டோபர் வரை என் பெற்றோர் வீட்டிலேயே இருந்தேன். என் கணவரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு என்னுடைய போன் நெம்பரையே பிளாக் செய்துவிட்டார். என் கணவர் வெளிநாடு சென்று திரும்பி வந்ததும், எனக்கு ஏற்பட்ட கொடுமைகளை என் பெற்றோரிடம் சொன்னேன்.
என்னுடைய பெற்றோர் என்னை அழைத்துக் கொண்டு என் மாமனார் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டனர். அப்போது, என் அப்பாவை தகாத வார்த்தைகளால் திட்டிய என்னுடைய மாமனார், `உன் குடும்பத்தையே ஒழித்துக் கட்டிவிடுவேன்’ என மிரட்டல் விடுத்தார். அதன்பிறகும், பிடிவாதம் பிடித்து என் கணவனைச் சந்தித்தேன். அப்போது என் கணவர் என்னிடம், `பழத்தை சாப்பிட்டு பார்த்தால்தான் டேஸ்ட் தெரியும். அப்போதுதான் வேண்டுமா, வேண்டாமா என்று சொல்ல முடியும். எனக்கு நீ வேண்டாம்’ என்று சொல்லி, வீட்டுக்குள் செல்ல என்னை அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி, எனது பெற்றோர் எங்கள் ஊர் ஜமாத்தில் கடந்த 17-10-2024 அன்று மனு அளித்தனர். ஜமாத் நிர்வாகத்தினர் இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் பேசியதால், 5-12-2024 அன்று என் கணவன் வீட்டுக்கு மீண்டும் நம்பிக்கையுடன் சென்றேன்.
அதன்பிறகு, வேலூர் சதுப்பேரி முல்லை நகர் வீட்டில் என்னையும், கணவரையும் தனிக்குடித்தனம் வைத்தனர். அங்கு முதல்மாடியில் குடியிருந்தோம். என் மாமனார் தூண்டுதலின்பேரில், `உனக்கு தலாக் கொடுத்துவிடுகிறேன்’ எனக்கூறி என்னுடைய அந்தரங்க உடல் பாகங்கள் மீது கணவன் எட்டி உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார். இது குறித்து என் தந்தை என்னுடைய மாமனாரைத் தொடர்புகொண்டு கேட்டதால், என் கணவன் ஆத்திரமடைந்து, கடந்த ஜூன் 3-ம் தேதி இரவு மொட்டை மாடியில் நின்றிருந்த என்னை திடீரென கீழே தள்ளிவிட்டார்.
கீழே விழுந்து கிடந்தபோதும், என் அருகில் வந்து நின்றுகொண்டு என் கணவன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். அக்கம், பக்கத்தினர் என்னை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் ராணிப்பேட்டை வளாகத்துக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அப்போது அங்குவந்த மாமனார், `இந்தக் கொலை முயற்சியை வெளியில் சொல்லக்கூடாது. யாரிடமாவது வாயைத் திறந்தால், உன்னை விஷ ஊசிப்போட்டு கொன்றுவிடுவேன். உன் அப்பா, தம்பியையும் பொய் வழக்கில் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன். நான் போலீஸ்காரன்..’ என்று மிரட்டினார்.

பயத்தில் நானும், `செல்போன் பேசியபடி மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டேன்’ என்று மருத்துவர்களிடம் மாற்றிக் கூறிவிட்டேன். முதற்கட்டமாக எனக்கு இடுப்பு, முதுகு எலும்பு பகுதியிலும், வலது கால் பகுதியிலும் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது. வலது காலில் பிளேட் பொருத்தப்பட்டிருக்கிறது. நான் பிணம்போல படுத்த நிலையிலேயே இருக்கிறேன். இதுவரை ரூ.6 லட்சத்துக்கு மேல் மருத்துவ செலவாகியிருக்கிறது. என் பெற்றோர் கடன் வாங்கி எனக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அட்மிட் ஆன மறுநாளில் இருந்து என் கணவன், மாமனார், மாமியார் என்னை வந்து பார்க்கவில்லை. என்னால் என் வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னால் என்னுடைய பெற்றோர் படும் வேதனையைப் பார்க்கும்போதும் `நான் செத்துவிடலாம்’ என தினம் தினம் மனஉளைச்சலில் நினைக்கின்றேன்.
இந்த நிலையில்தான், ஜூலை 8-ம் தேதி அரியூர் காவல் நிலையத்தில் எனது தரப்பில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அங்கிருந்து இரண்டு பெண் காவலர்கள் நேரில் வந்து என்னிடம் நடந்த சம்பவத்தை வீடியோ மூலமாக பதிவு செய்துகொண்டதோடு, சில வெற்றுத் தாள்களிலும் கையெழுத்து வாங்கிச் சென்றனர். மேலும், என் கணவன், மாமனார், மாமியார் மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என்னுடைய கணவன், மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு சட்ட பாதுகாப்பும் வழங்க வேண்டும்’’ என மனுவில் கேட்டுக்கொண்டார் அந்தப் பெண்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, அதே அரியூர் காவல் நிலைய போலீஸார் நர்கீஸின் கணவன் காஜா ரஃபிக், மாமனாரும் சப்-இன்ஸ்பெக்டருமான பாபா, மாமியார் ஷகிலா ஆகியோர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். கணவர் காஜா ரஃபிக்கை நேற்று இரவே போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும், மாமனார், மாமியாரிடமும் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம், பேசுப்பொருளாகி, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.