வாணியம்பாடி: இடிந்து விழும் நிலையில் நூலகம்; சேதமடையும் புத்தகங்கள்... கண்டுகொள்...
ராமநாதபுரம்: பிரிந்து சென்ற மனைவி மீது சந்தேகம்; கூலிப்படை வைத்து கொன்ற கணவன்; சாயல்குடியில் கொடூரம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெர்மின் (34). இவருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரரான விஜய கோபால் என்பவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்த ஜெர்மின் வெட்டுக்காடு கிராமத்தில் தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார்.

வெட்டுக்காடு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் கடந்த 17-ம் தேதி இரவு ஜெர்மின் தனது குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது கையில் அரிவாளுடன் முகமூடி அணிந்த இரு நபர்கள் ஜெர்மின் வீட்டிற்குள் நுழைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் ஜெர்மினை கழுத்து மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.
இதனைக் கண்டு பயந்து நடுங்கிய குழந்தைகளின் அழுகுரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஜெர்மின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெர்மனின் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்தப் படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் முகமூடி கொலைகாரர்களைத் தேடி வந்தனர்.

இதனிடையே ஜெர்மினின் கொலை குறித்து அவரது கணவர் விஜயகோபால் குடும்பத்தினர் மீது சந்தேகம் இருப்பதாக ஜெர்மினின் தந்தை மைக்கேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.
இதனடிப்படையில் உத்தரகாண்ட் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த விஜயகோபாலை வரவழைத்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது வாக்குமூலம் அளித்த விஜயகோபால், ‘’திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்த சில ஆண்டுகளிலேயே எனக்கும் மனைவி ஜெர்மினுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. ஜெர்மினின் பெயரில் நான் கட்டிய வீட்டை அபகரித்துக் கொண்ட அவர், என்னிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் ஜெர்மின் பலருடன் தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜெர்மினைக் கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி கூலிப்படையினரை ஏவி ஜெர்மினை கொன்றேன்’’ எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து விஜயகோபாலைக் கைது செய்த போலீஸார், கொலையில் ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்தவர்களைத் தேடி வருகின்றனர்.