ஜீவனாம்சமாக ரூ.12 கோடி, பிஎம்டபிள்யு, மும்பை வீடு கேட்ட பெண்! பதில் கொடுத்த உச்ச நீதிமன்றம்
படித்த, திறமையான பெண்கள், தங்களது வாழ்வாதாரத்துக்காக, தாங்கள்தான் சம்பாதிக்க வேண்டும், ஜீவனாசம் என்ற பெயரில், கணவரிடமிருந்து இடைக்கால பராமரிப்புகளைக் கேட்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
விவகாரத்து வழக்கில், ஜீவனாம்சம் கேட்டு பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், அப்பெண்ணைப் பார்த்து, நீங்கள் மிகவும் படித்தவர். உங்களுக்காக நீங்கள்தான் சம்பாதிக்க வேண்டும், அதை மற்றவர்களிடம் கேட்கக்கூடாது என்று கருத்துக் கூறியுள்ளார்.
கணவரிடமிருந்து ஜீவனாம்சமாக மும்பையில் ஒரு வீடு, ரூ.12 கோடி ஜீவனாம்ச தொகை, பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவற்றைக் கேட்டு, பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீங்கள் தகவல் தொழில்நுட்பத் திறன் பெற்றவர். எம்பிஏ முடித்திருக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்களுக்கு பெங்களூரு, ஹைதராபாத்தில் நல்ல வேலை வாய்ப்பு இருக்கும். ஏன் நீங்கள் வேலை செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.