உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர்... பா. இரஞ்சித் ரூ. 20 லட்சம் நிதியுதவி!
வேட்டுவம் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர் குடும்பத்துக்கு பா. இரஞ்சித் நிதியுதவி அளித்துள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் வேட்டுவம் என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். இதில், நடிகர் அட்டகத்தி தினேஷும் ஆர்யாவும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முழுநீள பீரியட் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சில நாள்களுக்கு முன் படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டிணத்தில் நடைபெற்றபோது, கார் துரத்தல் காட்சியில் காரை பறக்க வைப்பதற்கான முயற்சியில் காரை வேகமாக ஓட்டிவந்த சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியதுடன் வேட்டுவம் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மோகன் ராஜின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் சிம்பு அவரது குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி செய்தார்.
இந்த நிலையில், வேட்டுவம் படத்தின் இயக்குநர் பா. இரஞ்சித் மறைந்த மோகன் ராஜ் குடும்பத்தினரைச் சந்தித்து ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: 5,000 திரைகளில் கூலி?