அனிமல் பட வில்லனுக்கு கௌரவம்..! டொரண்டோ திரைப்பட விழாவுக்குத் தேர்வு!
மும்பை: காதலன் துணையோடு கணவனைக் கொன்று வீட்டிற்குள் புதைத்து டைல்ஸ் பதித்த பெண்; சிக்கியது எப்படி?
மும்பை மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள நாலாசோபாரா பகுதியில் வசிப்பவர் விஜய் செளகான். இவரது மனைவி சமன் தேவி (28). கடந்த சில நாட்களாக விஜய் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதே பகுதியில் வசிக்கும் விஜய் சகோதரர்கள் வந்து, விஜய் குறித்து அவரது மனைவியிடம் விசாரித்தனர்.
அவர் குர்லாவிற்கு வேலைக்குச் சென்று இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அடுத்த சில நாட்கள் கழித்து மீண்டும் விஜய் வீட்டிற்கு அவரது சகோதரர்கள் வந்தனர். ஆனால் வீடு பூட்டி இருந்தது.
வீட்டிற்கு அருகில் வசித்தவர்களிடம் விசாரித்தபோது இரண்டு நாட்களுக்கு முன்புதான் சமன் தேவி கிளம்பிச்சென்றதாகத் தெரிவித்தனர். இதையடுத்து சமன் தேவிக்கு போன் செய்து பார்த்தபோது அவரது போனும் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து விஜய் வீட்டை அவரது சகோதரர்கள் திறந்து பார்த்தனர். வீட்டிற்குள் எதுவும் இல்லை. ஆனால் வீட்டின் ஓரத்தில் ஒரு பகுதியில் புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த சகோதரர்கள் அந்த இடத்தைத் தோண்டிப்பார்த்தபோது விஜய் ஆடைகள் முதலில் தென்பட்டது. மேற்கொண்டு தோண்டியபோது உள்ளே விஜய் உடல் இருந்தது. உடனே இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து வீட்டிற்குள் தோண்டி விஜய் உடலை எடுத்தனர். 4 அடி ஆழத்தில் வீட்டிற்குள் உடல் புதைக்கப்பட்டு இருந்தது. விஜய் வீட்டிற்கு அருகில் உள்ள வசித்து வந்த விஷ்வகர்மா(20) என்ற கல்லூரி மாணவரும் காணாமல் போய் இருந்தார். சமன் தேவியும், பக்கத்தில் வசிக்கும் 20 வயது வாலிபரும் சேர்ந்து விஜய்யைக் கொலை செய்து வீட்டிற்குள் புதைத்து இருப்பதாகத் தெரிகிறது.
அவர்கள் இரண்டு பேரும் தற்போது தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஆனால் அவர்களது போன்கள் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப் ஆக இருக்கின்றன.
விஜய்யும் சமன் தேவியும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். சமன் தேவி தனது கணவனைக் கொலை செய்துவிட்டு காதலனுடன் தப்பிச்செல்லும்போது தனது மகனையும் அழைத்துச் சென்றுவிட்டார்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் சமன் தேவி தனது கணவரின் மொபைல் போனைப் பயன்படுத்தி விஜய் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்திருந்தார். அதோடு விஜய் ஏ.டி.எம்.கார்டைப் பயன்படுத்தியும் பணத்தை எடுத்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஜய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வடைந்து ரூ.6 லட்சம் கிடைத்து இருந்தது. அதோடு அவரது வங்கிக் கணக்கில் 3 லட்சம் ரூபாய் இருந்தது. எனவே தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு விஜய் புதிய வீடு வாங்கத் திட்டமிட்டு இருந்தார்.

அதோடு தற்போது அவர்கள் வசித்து வந்த வீட்டையும் தனது மனைவி பெயருக்கு விஜய் மாற்றிக்கொடுத்தார். ஆனால் கடந்த 15 நாட்களாக தனது சகோதரர்கள் மற்றும் அருகில் உள்ள உறவினர்களிடம் கூட விஜய் போனில் பேசவில்லை.
விஜய் சித்தப்பா மோகன் விஜய் வீட்டிற்கு நேரடியாகச் சென்றபோது அங்கிருந்த சமன் தேவியிடம் விஜய் போன் இருந்தது. விஜய் வேலைக்குச் சென்று இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவர்கள் சந்தேகம் அடைந்து மும்பை முழுவதும் உள்ள உறவினர்களிடம் விஜய் குறித்து விசாரித்தனர்.
எங்கேயும் விஜய் செல்லவில்லை என்று தெரிய வந்தது. அதன் பிறகே அவர்களின் சந்தேகம் மேலும் தீவிரம் அடைந்தது.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ''சமன் தேவி கூலித்தொழிலாளர் ஒருவரை அழைத்து வீட்டிற்குள் 3.9 அடி ஆழத்தில் குழி தோண்டச் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு வேறு ஒரு தொழிலாளரை அழைத்து அந்த இடத்தில் புதிய டைல்ஸ் பதித்துள்ளார். இதற்காக ரூ.1200 கொடுத்துள்ளார்" என்று தெரிவித்தனர்.