குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் சந்திப்பு!
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று(ஜூலை) காலை தொடங்கிய நிலையில், மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரும் அவைக்கு வழக்கம்போல் தலைமைத் தாங்கினார்.
இந்த நிலையில், நேற்றிரவு மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு தன்கர் கடிதம் எழுதினார்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை மாநிலங்களவை அவையின் துணைத் தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் தலைமையில் கூடியது.
மேலும், மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவரின் ராஜிநாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டு, முறைப்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை மாநிலங்களவையின் துணைத் தலைவராகவுள்ள ஹரிவன்ஷ், அவையை வழிநடத்தவுள்ளார்.
இந்த நிலையில், குடியரசு தலைவர் மாளிகைக்கு நேரில் சென்ற ஹரிவன்ஷ், அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
ஹரிவன்ஷ், அடுத்த குடியரசு துணைத் தலைவரா?
ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான ஹரிவன்ஷ், 2020 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவராகவுள்ள ஹரிவன்ஷ், அடுத்த குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பிகார் முதல்வர் நிதிஷ் குமாரே குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.