"ஜெகதீப் தன்கரிடம் நட்டாவும், கிரணும் சொல்லவில்லை" - ஆய்வுக் குழுக் கூட்டம் குறித்து ஜெய்ராம் ரமேஷ்
துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (ஜூலை 21) அறிவித்திருந்தார்.
உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
அவரின் திடீர் ராஜினாமா எதிர்க்கட்சிகளிடையே ஒருவித சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில் தன்கரின் ராஜினாமா குறித்துப் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "நேற்று பகல் 12.30-க்கு ஜெகதீப் தன்கர் தலைமையில் மாநிலங்களவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது.
அவையின் ஆளுங்கட்சித் தலைவர் நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர்.
மீண்டும் மாலை 4.30 கூட்டம் கூடியபோது, நட்டா, ரிஜிஜு அதில் பங்கேற்கவில்லை. மேலும், தாங்கள் பங்கேற்காதது குறித்த முறையான தகவல் தன்கரிடம் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த தன்கர், அடுத்த நாள் பகல் 1 மணிக்குக் கூட்டத்தை ஒத்திவைத்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் திடீர் ராஜினாமா புரிந்துகொள்ள முடியாத அதிர்ச்சியாக உள்ளது.

நீதித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட இருந்தார்.
உடல் நிலையில் தன்கர் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இருப்பினும், இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.