Tanzania: 3,000 ஆண்டுகள் பழமையான மரங்கள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு, தான்சானியா. இங்கு, இதுவரை மனிதர்களால் பார்க்கப்படாத, சுமார் 3000 ஆண்டுகள் பழமையான மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் போது, இத்தாலியின் ட்ரெண்டோவில் உள்ள மியூஸ் அறிவியல் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தாவரவியல் நிபுணர் ஆண்ட்ரியா பியான்சி மற்றும் தன்சானிய ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்த மரத்தை கண்டறிந்தனர்.
மனித குடியிருப்புகளிலிருந்து வெகு தொலைவில், மேகமூட்டமான பள்ளத்தாக்குகளில் மறைந்திருந்த இந்த மரம், தாவரவியல் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டெஸ்மானியா பிரின்ஸெப்ஸ் எனப் பெயரிடப்பட்ட இந்த மரம், வெப்பமண்டலத்தில் மிக உயரமான மற்றும் பழமையான மரங்களில் ஒன்றாக விளங்குகிறது.

தற்போது இந்த அரிய இனத்தில் 100 முதிர்ந்த மரங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதால், இதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
4,200 முதல் 5,000 அடி உயரத்தில் உள்ள இரண்டு செங்குத்தான பள்ளத்தாக்குகளில் இந்த மரங்கள் காணப்படுகின்றன. வீழ்ந்த மரத்தை ஆய்வு செய்ததில், இது மிக மெதுவான வளர்ச்சி விகிதத்தைக் குறித்துள்ளது. இதன்படி இந்த மரங்களின் வயது 3,000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர். டெஸ்மானியா பிரின்ஸெப்ஸ் மரங்கள் 130 அடி உயரம் வரை வளரக்கூடியவையாக உள்ளது.
தான்சானியாவின் ஒரு மலைப்பகுதியில், அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதி, மனிதர்கள் அரிதாக பயணிக்கும் இடமாக இருப்பதால், இந்த மரங்கள் இதுவரை கவனிக்கப்படாமல் இருந்துள்ளன.
இந்த மரத்தின் இனத்தில் 1,000-க்கும் குறைவான மரங்கள் மட்டுமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இவை பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன.

அருகிலுள்ள விவசாய நில விரிவாக்கம், பாதைகள் அமைப்பு மற்றும் தீ ஆபத்து ஆகியவை இதன் வாழிடத்தை அச்சுறுத்துகின்றன. இந்த மரத்தின் தேவைகளைப் புரிந்து கொள்ளவும், அதன் குறைந்த எண்ணிக்கையை பாதுகாக்கவும் உடனடி சுற்றுச்சூழல் ஆய்வுகள் தேவை என பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த மரங்கள் புவி வெப்பமயமாதல் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த ஆய்வுகளுக்கு புதிய புரிதலை அளிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.