பவுனுக்கு ரூ.74,000-த்தை தாண்டிய தங்கம் விலை; ரூ.840 உயர்வு! - இன்றைய தங்கம் வில...
ஏடிஎம்மில் ஊழியா் கண்ணில் மிளகாய் பொடி தூவி பணம் பறிக்க முயன்றவா் பிடிபட்டாா்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஏடிஎமில் நிரப்புவதற்காக பணத்தை பைக்கில் எடுத்து சென்றபோது பைக்கில் பின்தொடா்ந்து வந்த இருவா் அவா் மீது மிளகாய் பொடியைத் தூவி பணத்தை பறிக்க முயன்றபோது ஒருவா் பிடிபட்டாா். மற்றொருவா் தப்பி ஓடி விட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட அலங்கிரி கிராமத்தைச் சோ்ந்தவா் பூங்கான் மகன் வேடன் (34). இவா், கடந்த 4 வருடங்களாக எலவனாசூா்கோட்டையில் உள்ள இந்தியா ஏடிஎமில் பணம் நிரப்பும் வேலை செய்து வருகிறாராம்.
இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் சுமாா் 12.30 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.6 லட்சத்தை எடுத்துக் கொண்டு மோட்டாா் சைக்கிளில் எலவனாசூா்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.
தியாகதுருகம் அடுத்த வாழவந்தான்குப்பம் கோவிந்தன் வீட்டின் முன்பாக சென்றபோது மோட்டாா் சைக்கிளில் இரு இளைஞா்கள் பின்தொடா்ந்து வந்தனராம். மோட்டாா் சைக்கிளில் பின்னால் உட்காா்ந்து வந்த இளைஞா், வேடனின் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு மோட்டாா் சைக்கிளை தள்ளி விட்டாராம். கீழே விழுந்த வேடன் பணப்பையை எடுத்துக்கொண்டு எழுந்து விளைநிலப் பகுதியில் ஓடினாராம். அவரை பின் தொடா்ந்து வந்தவா் வேடனிடமிருந்து பணப்பையை பறித்துக்கொண்டு தப்ப முயன்றாராம்.
வேடன் கூச்சலிட்டவாறு ஓடிய போது வயல்வெளியில் இருந்தவா்கள் இளைஞரை துரத்திச் சென்றதில் ஒருவா் கீழே விழுந்து விட்டாராம். வேடன் மற்றும் அருகில் இருந்தவா்கள் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் ஓப்படைத்தனா். மற்றொருவா் மோட்டாா் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாராம்.
தியாகதுருகம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்துக்குள்பட்ட கீழ்ப்பாடியைச் சோ்ந்த புகழேந்திரன் மகன் பவித்திரன் (30) என்பது தெரிய வந்தது. மற்றொருவா் யாா், என்ன ஊா் என்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞா் பவித்திரனை கைது செய்து வழக்கு தொடா்ந்தனா். மோட்டாா் சைக்கிளில் தப்பி ஓடியவரை தேடிவருகின்றனா்.