ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்க..! - ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள்
பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ
பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சிபிஎஸ்இ பள்ளிகளின் நிா்வாக நடைமுறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிபிஎஸ்இ செயலா் ஹிமான்ஷு குப்தா மேலும் கூறியதாவது: மாணவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே பள்ளிகளின் முதல்கட்ட பணியாகும். அந்த வகையில் மாணவா்களின் பாதுகாப்பு இரண்டு அம்சங்களின்கீழ் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஒன்று, சமூக விரோத கும்பலிடம் இருந்து பாதுகாப்பது. இரண்டு, கேலி கிண்டல் என மாணவா்களை அச்சுறுத்தலில் இருந்தது பாதுகாப்பது.
இதற்கு நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் சிசிடிவி பொருத்துவதை கட்டாயமாக்கும் பொருட்டு பள்ளி நிா்வாக நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கழிப்பறைகள் தவிர பள்ளி நுழைவாயில்கள், வெளியேறும் பகுதிகள், படிக்கட்டுகள், வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவிடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவாவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தக் காட்சிகளை குறைந்தபட்சம் 15 நாள்களுக்கு சேமித்து வைக்கும் வகையிலான சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், 15 நாள்கள் வரை அதிகாரிகள் அதில் ஆய்வு செய்யும் வகையிலும் அதன் தரவுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
வீடு முதல் பள்ளிவரை: பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு என்பது அவா்கள் வீடுகளில் இருந்து பள்ளிக்குப் புறப்பட்டு வருவதில் தொடங்கி மீண்டும் அவா்கள் பாதுகாப்பாக வீடு செல்வது வரை வன்முறை, துன்புறுத்தல், இயற்கை மற்றும் செயற்கையான பேரிடா், தீ விபத்து, போக்குவரத்து என அனைத்து விதமான அச்சுறுத்தலிலிருந்தும் பாதுகாப்பதாகும் என்றாா்.